TNPSC Thervupettagam

ஹென்றி கிஸிஞ்சர்: அமெரிக்கச் சாணக்கியர்

December 7 , 2023 209 days 139 0
  • அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரியாகக் கருதப்பட்ட ஹென்றி கிஸிஞ்சர் (Henry Kissinger), தனது நூறாவது வயதில் நவம்பர் 29 அன்று காலமானார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சிற்பி என்று அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் மெச்சப்படும் கிஸிஞ்சரின் வாழ்க்கை, பல்வேறு சாகசங்களும் சர்ச்சைகளும் நிறைந்தது.

அமெரிக்க ராஜகுரு

  • அமெரிக்காவின் 37ஆவது அதிபரான ரிச்சர்ட் நிக்ஸனின் தேசியப் பாதுகாப்புச் செயலராக 1969 முதல் 1974 வரை இருந்தவர் கிஸிஞ்சர். வாட்டர்கேட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, பதவிநீக்கம் செய்யப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், வேறு வழியின்றி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் நிக்ஸன். அவருக்குப் பின் பதவியேற்ற ஜெரால்ட் ஃபோர்டின் ராஜாங்கச் செயலராக 1974 முதல் 1977 வரை என மொத்தம் 8 ஆண்டுகாலம் கிஸிஞ்சர் பதவிவகித்தார். பதவிக்காலம் முடிந்த பின்னரும், தனது இறுதிநாள் வரை கட்சி வேறுபாடின்றி அமெரிக்க அரசியல் தலைவர்களின் ராஜகுருவாக வலம்வந்தார்.
  • உலக அளவில் அரசியல் தலைவர்களுக்கும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கும் ஆலோசனை கூறும் நிபுணராகவும் தனது இறுதி நாள்களைக் கழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், குறிப்பாக அறுபதுகளுக்குப் பின், தனது உலக வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மேற்கொண்ட அரசியல்-ராணுவ நடவடிக்கைகளின் சூத்ரதாரியான கிஸிஞ்சர், மிகவும் சர்ச்சைக்குரியவர். அமெரிக்க ஆளும் வர்க்கத்தினருக்கு அவர் சிறந்த அறிவாளி, அரசியல் தந்திர நிபுணர்; விமர்சகர்களுக்கோ, அவர் அரசியல் நலன்களுக்காக லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிகொடுக்கத் தயங்காத, ஈவிரக்கமற்ற போர்க் குற்றவாளி.

கொலைகளை விளைவித்தவர்

  • கிஸிஞ்சரின் வாழ்க்கை, சவால்கள் நிறைந்தது. ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில், யூதக் குடும்பத்தில் 1923இல் பிறந்த ஹென்றி கிஸிஞ்சர், ஹிட்லரின் யூத விரோத நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கல்வியைத் தொடர முடியாமல் குடும்பத்தினருடன் 1938இல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க ராணுவத்தில் இணைந்து, ஹிட்லரின் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டுத் தனது குடும்பம் அனுபவித்த இன்னல்களுக்குப் பழிதீர்த்துக்கொண்டார். கிஸிஞ்சர் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு விசுவாசமான நண்பர்கள் என்று யாரும் கிடையாது.
  • யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார். யூத இனத்தவர் என்பதால், சிறுவயதில் இனவெறுப்புக்கு உள்ளாக்கப்பட்டது, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றதன் மூலம் போரின் கொடுமைகளை அறிந்துகொண்டது உள்ளிட்ட அனுபவங்களால் உலக சமாதானம், நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு போன்ற கருத்தாக்கங்களின்பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. மாறாக, ராணுவ வலிமையைக் காட்டி அச்சுறுத்துவது, தேவைப்பட்டால் போர் மூலம் அடிபணிய வைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே அமைதியை நிலைநாட்டும் என்று அவர் நம்பினார். லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றில், முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரான சிலே நாட்டு சோஷலிச அரசின் அதிபர் சால்வதோர் அய்யந்தே, சுயசார்புப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்தவர்.அமெரிக்கா அதை ரசிக்கவில்லை.
  • இந்தப் பின்னணியில், 1973இல் அவரது ஆட்சி ராணுவப் புரட்சியால் கவிழ்க்கப்பட்டது; அய்யந்தே படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சதியின் சூத்ரதாரி கிஸிஞ்சர்தான். இது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பின்னாளில் ஒப்புக்கொண்ட செய்தி. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸபெல் பெரோனின் ஆட்சியை 1976ஆம் ஆண்டு கவிழ்த்ததன்மூலம் அர்ஜென்டினாவிலும் அதே சதியை அரங்கேற்றினார் கிஸிஞ்சர். 1975இல் கிழக்கு திமோரின் சுதந்திரப் பிரகடனத்தை முறியடிக்க சுகார்தோவைத் தூண்டிவிட்டு, அந்த நாட்டை இந்தோனேசியா ஆக்கிரமித்துக்கொள்வதற்கு உதவினார்.
  • இதனால், கிழக்கு திமோரின் நான்கில் ஒரு பங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1975இல் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி அளித்து, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) இன அழிப்பு நடவடிக்கைக்கு உதவினார். கம்போடியாவில் வியட்நாம் போராளிகள் ஒளிந்திருப்பதாகக் கூறி, அந்நாட்டின்மீது ரகசியமாகக் குண்டுமழை பொழிந்ததில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையின் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தபோது, அது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்று கிஸிஞ்சர் சாதித்தார். இத்தனைக்குப் பிறகும், வியட்நாமில் அமைதி ஏற்பட வகைசெய்தார் என்ற பெயரில் அவருக்கு 1973ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட விநோதமும் நிகழ்ந்தது.
  • இதுபோன்ற இன்னும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளால் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் கிஸிஞ்சர் காரணமானவர் என்று பிரபல வரலாற்று ஆய்வாளர் க்ரேக் க்ரான்டின், ‘Kissinger’s Shadow: The Long Reach of America’s Most Controversial Statesman’ நூலில் சுட்டிக்காட்டுகிறார். பனிப்போர்காலத்தின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு வடிவம் கொடுத்த கிஸிஞ்சர், ஒரு தீவிர யதார்த்தவாதி.என்ன விலை கொடுத்தும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தை உறுதிசெய்வது, அதன் விதிவிலக்குத்தன்மையைப் பாதுகாப்பது என்பவைதான் அவருடையயதார்த்தவாதத்தின் நோக்கமாக இருந்தன.

இன்னொரு முகம்

  • சோவியத் ஒன்றியத்துடனும் சீனாவுடனும் அமெரிக்கா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டதில் கிஸிஞ்சரின் பங்கு மிக முக்கியமானது. 1957இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றியபோது எழுதிய, ‘Nuclear Weapons and Foreign Policy’ என்ற நூலில், வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவில் யதார்த்தவாத அணுகுமுறையின் அவசியத்தைஅவர் வலியுறுத்தினார். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத கிஸிஞ்சர், அதிபர் நிக்ஸனின் தேசியப்பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட இப்புத்தகம்தான் காரணமாக அமைந்தது. அணு ஆயுத வல்லரசுகள் என்ற வகையில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் கிஸிஞ்சர் உறுதியாக இருந்தார். அதற்காக நிக்ஸனை வற்புறுத்தி சோவியத் ஒன்றியத்துடன் அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் செய்துகொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.
  • இன்னொரு புறம், ஒரு தீவிர கம்யூனிச விரோதியான கிஸிஞ்சர், சோவியத் ஒன்றியம் மாவோ தலைமையிலான சீனாவுடன் இணைந்து உலக நாடுகளைக் கம்யூனிசத்தின்பால் இழுத்து அமெரிக்க மேலாதிக்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைகிறது என்று கருதினார். அதற்காக சீனாவுக்கு எதிராகத் தைவானின் சுதந்திரத்தை ஆதரித்தார். ஆனால், குருஷேவுக்கும் மாவோவுக்கும் இடையில் தத்துவார்த்தப் பிளவு ஏற்பட்டபோது, அதைச் சாதகமாகப் பயன்படுத்திச் சீனாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, சீனாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தத்தில் 1972இல் கையொப்பமிட்டார்.
  • சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்க மளிப்பதன்மூலம் அமெரிக்காவைவிட சீனாதான் அதிகமாகப் பயன்பெறப்போகிறது என்ற உண்மையை உணர்ந்துகொள்ளத் தவறிய ‘அரசியல் தந்திர நிபுணர்’ அவர். சீனாவை அமெரிக்க செல்வாக்கின்கீழ் வைத்துக்கொள்ள அவர் எடுத்த முயற்சிக்காகக் கிட்டத்தட்ட நூறு முறை சீனாவுக்குச் சென்று திரும்பினார். இறப்புக்கு முந்தைய அவரது கடைசிப் பயணமும் சீனாவுக்குத்தான். சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற அவரது கணிப்பு தவறாகிவிட்டதை, அவர் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டது.

முற்றுப்பெறும் மனப்பான்மை

  • கிஸிஞ்சரின் மரணம் ஒரு தனிமனிதனின் வாழ்வுக்கு ஏற்பட்ட முடிவு அல்ல, மாறாக அது அமெரிக்கா எனும் நாட்டின் ஏகாதிபத்திய ஒற்றைத்துருவ விதிவிலக்கு மனப்பான்மைக்கு ஏற்பட்ட முடிவு. கிஸிஞ்சர் கடந்த நூற்றாண்டின் அந்த அமெரிக்க மனப்பான்மையின் பிரதிநிதி. உலகம் ஒரு பன்முக அரசியல் பண்பாட்டை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலகப் போரைக்கூட நடத்தத் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு போர் ஏற்பட்டால் ரோமானியப் பேரரசுக்கு ஏற்பட்ட நிலைதான் அமெரிக்காவுக்கும் ஏற்படும் என்பதைக் கிஸிஞ்சரின் வாரிசுகளும் நன்கு அறிவர். கிஸிஞ்சர் நூறு ஆண்டுகள் நிறைவாக வாழ்ந்தார்; நல்லவர்களுக்கு எப்போதும் ஆயுசு குட்டைதான்!

நன்றி: தி இந்து (07 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்