ஹோமியோபதி: பக்க விளைவுகளற்ற சிகிச்சை
- அதிகரித்துவரும் நோய்களும் அவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹோமியோபதியில் உள்ள பக்க விளைவுகளற்ற மருந்துகளும் அவற்றின் மூலம் கிடைக்கும் நிரந்தர நிவாரணமும் மக்களிடையே ஹோமியோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் ஆர்.அன்பரசி (BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery).
அச்சத்தை ஏற்படுத்தும் நோய்கள்:
- கரோனா தொற்றுபோல அவ்வப்போது வெளிவரும் திடீர் நோய்கள், மக்களைத் தற்போது அச்சத்தின் பிடியிலேயே வைத்துள்ளன. கரோனா தொற்றுப் பரவலின்போது, நேரடிப் பலன் தரக்கூடிய மருந்துகள் இல்லாமல் மக்கள் தவித்த நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பு அரணாக இருக்க முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருந்தது.
- அப்போது, சேலம் மாநகராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஹோமியோபதி மருந்துகளை, சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கியவர் ஹோமியாபதி மருத்துவர் ஆர்.அன்பரசி.
- கரோனா சிகிச்சைக்காக சேலத்தில் நடத்தப்பட்ட ஆயுஷ் மருத்துவ முகாமில், கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து 3 மாதங்கள் கட்டணமின்றிச் சிகிச்சை வழங்கி, மக்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இச்சூழலில் மக்களிடையே அதிகரித்துவரும் பல்வேறு நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகளின்றி, மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கிறது என மருத்துவர் ஆர்.அன்பரசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- வயது வேறுபாடின்றி “பரபரப்பான வாழ்க்கைச் சூழல், மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள், சுற்றுச் சூழல் மாசு எனப் பல்வேறு காரணிகளால், மக்களுக்கு நோய்களின் தாக்கம் அதிகரித்துவருகிறது. வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட நீரிழிவு நோய், இப்போது சிறு வயதினரிடமும் இருப்பதை அதிகமாக அறிய முடிகிறது.
- அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்ட புற்றுநோய், இப்போது பரவலாகக் காணப்படுகிறது. இதேபோல, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை, தைராய்டு எனப் பல்வேறு குறைபாடுகள் மக்களிடம் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில், சிகிச்சைக்காக உட்கொள்ளப்படும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் மக்களை அச்சுறுத்திவருகின்றன.
- மேலும், பல்வேறு நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகளற்ற நிவாரணம் கிடைக்கிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் ஏற்கெனவே, பட்ட மேற்படிப்புகள் (M.D.,) இருக்கும் நிலையில், இம்மருத்துவத்துக்குக் கிடைத்துவரும் வரவேற்பு காரணமாக, 2025ஆம் ஆண்டில், M.D., Dermatoloy. M.D., Community Medicine என மேலும் இரு பட்ட மேற்படிப்புகள் அறிமுகமாகி உள்ளன.
35,000 மருந்துகள்:
- ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மக்களுக்கு அதிகரித்துவரும் நம்பிக் கையும், நோய்களுக்குக் கிடைக்கும் சிறந்த நிவாரணமும்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மென்றால், ஹோமியோபதியில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி மருந்துகள், நீர்த்தல் முறையில் தயாரிக்கப்படுபவை. எனவே, இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் என்பதே இல்லை.
- நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, குழந்தையின்மை, சிறுநீரகக் கல், பித்தப்பை கல் எனப் பல்வேறு பாதிப்பு களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை உள்ளது. இப்போதெல்லாம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினை, நோய்களின் பெயரோடு கூறி உடனடி சிகிச்சையை எதிர்பார்க்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு நோயில் இருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் போய்விடும்.
- என்னுடைய மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு நாடி பார்த்து, அவர்கள் உடலின் தன்மை, மனநிலை, உடல் பாதிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படை யிலேயே சிகிச்சை அளிக்கிறேன். இதன் மூலம் நோயின் மூலக் காரணம் அறியப்படுவதுடன், பாதிப்பை முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது.
- பொதுவாக, மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவக் கல்வி மட்டுமல்லாது, சிகிச்சை அனுபவமும் சேர்ந்தால்தான் நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சையை அளிக்க முடியும்.
- காய்ச்சல், தலைவலி, நீரிழிவு நோய் ஆகியவற்றுக்குப் பலரும் முக்கியமான மருந்துகளையே பரிந்துரைப்பர். ஆனால், ஒவ்வொரு நோய்க்கும் குறிப்பிட்ட சில மருந்துகளைத் தவிர்த்து, பல மருந்துகள் உள்ளன.
பிற சிகிச்சைகள்:
- நீரிழிவு நோய்க்கு ஹோமியோபதியில் Syzygium, Gymnema, Cephalandra என்கிற மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. எனினும், நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் தன்மைக்கேற்ப, Galea officialis, Cynara scolymus, Rhusatom என்கிற மருந்துகளையும் பயன்படுத்தும்போது விரைவில் நிவாரணம் கிடைக்கச் செய்ய முடியும்.
- இதுபோல, ஒவ்வொரு நோய்க்கும் ஹோமியோ பதியில் எண்ணற்ற மருந்துகள் உள்ளன. சிகிச்சை அளிப்ப தில் ஆர்வமும் தேடலும் இருக்கும்போது, நோயாளி களுக்கு நம்மால் தரமான சிகிச்சையை வழங்க முடியும். குழந்தையின்மை பாதிப்பு என்பது பெண்களுக்கான மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக, ஆட்டோ இம்யூனிசேஷன் எனும் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை முக்கியமாகக் கூறலாம். இது ஆணின் விந்தணுக்களை ஏற்க முடியாதபடி (Anti sperm antibody) பெண்ணின் உடலில் மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.
- இந்தப் பாதிப்பினைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஹோமியோபதி மருத்து வத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இதேபோல், பெண்ணின் கருப்பை நீர்க்கட்டிகளும் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணம். குழந்தையின்மைக்கான இதுபோன்ற பல்வேறு காரணங்களைக் கண்டறிந்து, ஹோமியோபதி மருத்துவத்தில் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் கிடைக்கச் செய்ய முடியும்.
- மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள தைராய்டு, நீரிழிவு உள்படச் சில முக்கிய நோய்களுக்குச் சிறந்த மருந்துகளைத் தேர்ந்தெடுத்து வழங்கி அவர்களை முழுமையாகக் குணமடையச் செய்வதை, முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்” என்கிறார் மருத்துவர் அன்பரசி.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 01 – 2025)