இதற்கு எப்போது முடிவு?
- உயிர் காக்கும் மருத்துவர்கள் தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுப் போராடும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.
- நாடுதழுவிய அளவில் மருத்துவர்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். உறைவிட மருத்துவர்கள் சங்க சம்மேளனம் வேலைநிறுத்தத்தை கைவிட்டது என்றாலும்கூட, மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ், இந்திரா காந்தி மருத்துவமனை உள்ளிட்டவற்றிலும், மேற்குவங்க அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
- ஆரம்பம் முதலே பிரச்னையை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, இளம் முதுநிலை மருத்துவரின் உயிரிழப்புக்கு நியாயம் தேடும் முயற்சியில் காவல் துறை இறங்காதது மிகப் பெரிய அவலம். பிரச்னை அரசியலாக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை. நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது மூடி மறைக்க முயலும் போக்கு தெளிவாகவே இருப்பதால்தான், இப்போது வழக்கை சிபிஐ-க்கு மாற்றியிருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.
- கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய நாள் இரவு 11 மணிக்கு ஓய்வுக்குப் போனார் அவர். அவரது உயிரற்ற உடலில் காணப்பட்ட காயங்கள் அவர் பின்இரவுக் காலத்தில் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தின. மருத்துவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உயர்ந்த எதிர்வினையைத் தொடர்ந்து, காவல் துறையினருடன் இணைந்து செயல்படும் தன்னார்வத் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பதற்றத்தை தணிப்பதற்காக அவசர கதியில், விசாரணை முழுமையடையாமல் ஒருவரை காவல் துறை பலியாடாக்கி இருக்கிறது என்று தோன்றுகிறது.
- ஆரம்பத்தில் தற்கொலை என்று காவல் துறையால் புறந்தள்ளப்பட்டு, தனது மகளின் கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதாக அந்த பெண் மருத்துவரின் தந்தை குற்றம்சாட்டியதைத் தொடர்ந்துதான் யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி திசைதிருப்ப முற்பட்டது காவல் துறை.
- மம்தா பானர்ஜி அரசின் நடவடிக்கைகளும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. முதுநிலை பயிற்சி மருத்துவருக்கு பாதுகாப்புத் தரவும், உயிரைக் காப்பாற்றவும் முடியாததற்கு வருத்தம் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பதவி விலகினார். அடுத்த 12 மணிநேரத்தில், அவரை கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மம்தா பானர்ஜி அரசு நியமித்தபோது ஒட்டுமொத்த மருத்துவர் சமுதாயம் கொதித்தெழுந்ததில் வியப்பென்ன இருக்கிறது? இப்போது நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் நடந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகள் நடந்ததை உறுதிப்படுத்துகின்றன.
- போர் நடக்கும்போதுகூட மருத்துவமனைகளுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் விதிவிலக்கு தரப்படுகிறது. ஆனால், மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிற நிலைமை காணப்படுவதை என்னவென்று சொல்வது? மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் தாக்கப்படுவது புதிதொன்றுமல்ல. செவிலியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவலம் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலம் சூரத்தில் செவிலியர் ஒருவர் நோயாளி ஒருவரால் தாக்கப்பட்டு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டன. செவிலியரின் புகாரைத் தொடர்ந்து இந்திய குற்றவியல் சட்டம் 332-இன் கீழ் அந்த நோயாளி மீது வழக்கு போடப்பட்டது. இன்றுவரை அந்த செவிலியருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதுபோல மருத்துவர்களும் செவிலியர்களும் தாக்கப்படுவதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும் ஊடகங்களில், இப்போதைய கொல்கத்தா சம்பவம்போல, எப்போதாவது ஒருமுறைதான் செய்தியாகிறது.
- நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் எதுவும் மாறவில்லை என்பதை தற்போதைய கொல்கத்தா சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
- 2012-இல் 24,900 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன என்றால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-இல் 31,516-ஆக 25% அதிகரித்தது. காவல் துறை ஆவணப்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 86 பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன.
- தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் 2017 முதல்தான் பாலியல் தொடர்பான கொலைகளை ஆவணப்படுத்தத் தொடங்கியது. ஆண்டுதோறும் 220 பாலியல் தொடர்பான கொலைகள் நடக்கின்றன என்பதை பதிவுகள் தெரிவிக்கின்றன.
- 1973 நவம்பர் 27-ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் 25 வயது செவிலியர் அருணா ஷெண்பாகுக்கு நேர்ந்த அவலமும், அந்தப் பாலியல் வன்கொடுமையால் செயலிழந்து அடுத்த 42 ஆண்டுகள் சக செவிலியர்களால் பராமரிக்கப்பட்ட சோகக் கதையும் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. கொல்கத்தா முதுநிலை பயிற்சி மருத்துவருக்கு நியாயம் கிடைத்தால் மட்டும் போதாது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவரும், செவிலியரும், சுகாதாரப் பணியாளரும் அச்சமின்றி சேவைபுரிய வழிகோலாமல் போனால், பிறகென்ன சட்டம் ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு?
நன்றி: தினமணி (16 – 08 – 2024)