TNPSC Thervupettagam

‘உணர்வுசார் நுண்ணறிவு’ ஒருவருக்கு ஏன் அவசியம்?

February 14 , 2025 7 days 25 0

‘உணர்வுசார் நுண்ணறிவு’ ஒருவருக்கு ஏன் அவசியம்?

  • இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான யுவல் நோவா ஹராரியிடம், ’எதிர்காலத் தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை என்ன?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், ’21ஆம் நூற்றாண்டின் மிகவும் அத்தியாவசியமான திறன் - ’உணர்வுசார் நுண்ணறிவு’ (Emotional Intelligence). ஏனெனில் இந்த நூற்றாண்டில் பணிச்சூழல், பணியின் தன்மையில் வேகமாக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களைச் சமாளிப்பதற்கும், தொடர்கற்றல் மூலம் தங்களைத் தகுதிபடுத்திக் கொள்வதற்கும் உளவியல்ரீதியான மீள்தன்மை (Psychological Resilience) அவசியம்’ என்று பதிலளித்தார்.

போட்டித் தேர்வில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’

  • ஒரு நெருக்கடியை மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் சமாளித்து நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு விரைவாகத் திரும்பும் திறன்தான் உளவியல்ரீதியான மீள்தன்மை என்கிறோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013ஆம் ஆண்டு முதல் பொது அறிவுத்தாள்-4 என்கிற தாளையும் முதன்மைத் தேர்வில் சேர்த்தது. இந்தத் தாளுக்குரிய பாடப்பகுதியில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ தலைப்பும் ஒரு பகுதியாக உள்ளது.
  • ராணுவத்தில் பணியாற்ற அதிகாரிகளைத் தேர்வு செய்யும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வில் (CDS) தலைமைப் பண்பு, குழு செயல்பாடு, சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் துணை நிலைய அதிகாரி, உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான தேர்வில் உளவியல் தொடர்பான தேர்வும் இடம் பெறும். இந்திய விமானப்படை நடத்தும் ‘ஏர்மேன்’ பதவிக்கான தேர்விலும்கூட ‘Pilot Aptitude Battery Test’ (PABT) என்பது ஒரு பகுதியாக உள்ளது.
  • முன்பு எப்போதையும்விடத் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பணி இடங்களில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ குறித்து அதிகம் பேசப்படுகிறது. பணி இடத்தில் இது ஒரு மதிப்புமிக்க முக்கியமான திறனாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்றால் என்ன, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதைப் பார்க்கலாம்.
  • ’உணர்வுசார் நுண்ணறிவு’ என்பதைத் தனிநபர் ஒருவர் தன்னுடைய உணர்வுகளை உணரவும், புரிந்துகொள்ளவும், சமயோசிதமாக வெளிப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தவும் மட்டுமன்றி பிறரின் உணர்வையும் அறிந்து, சரியான முறையில் செயல்பட உதவும் உளவியல் திறன்களின் தொகுப்பு எனலாம்.
  • 1980ஆம் ஆண்டில் பீட்டர் சலோவே, ஜான்மேயர் ஆகியோர் உணர்வுகள் (Emotions) குறித்து ஆய்வுசெய்து, சாதனையாளர்களின் வெற்றிக்குப் பின் அவர்களின் அறிவுத்திறனைவிட உணர்வுத்திறன் முக்கியப் பங்கு வகித்திருந்ததைக் கண்டறிந்தனர். அமெரிக்க உளவியலாளர் டேனியல் கோல்மென் 1995ஆம் ஆண்டில் ‘Emotional Intelligence’ என்கிற புத்தகத்தை எழுதினார்.
  • அதன் பின்புதான் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்பது உலகெங்கும் பிரபலமானது. இவரது கருத்துப்படி ஒருவரின் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்பது தன்னுடைய உணர்வுகளை அறிந்துகொள்ளும் சுய விழிப்புணர்வு, தன்னுடைய உணர்வுகளைச் சரியாக நிர்வகிப்பது, தன்னூக்கம், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடப்பது, பிறருடனான உறவுகளைச் சரியாகக் கையாளும் திறன் ஆகிய 5 பண்புக் கூறுகளைக் கொண்டது என விளக்குகிறார்.

இந்தப் பண்புகளை வளர்ப்பது எப்படி?

  • நுண்ணறிவுத் திறனை ‘IQ’ என்கிற அளவீட்டில் குறிப்பதைப்போல ‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்பது ‘EQ’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ‘EQ’ எந்த அளவு உள்ளது என்பதைக் கண்டறிய இணையதளத்தில் பரிசோதனை செய்து பார்க்கக்கூடிய உளவியல் பரிசோதனைகள் கட்டணமின்றி கிடைக்கின்றன. ‘Psychologytoday.com’ என்கிற இணையதள முகவரியில் ‘Emotional Intelligence’ என்கிற தலைப்பில் பல்வேறு தேர்வுகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி உங்களது ‘EQ’ அளவைத் தெரிந்துகொள்ளலாம்.
  • EQ’ குறைவாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். IQவைப் போலல்லாமல் உணர்வுசார் நுண்ணறிவை வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் மேம்படுத்த முடியும். நுண்ணறிவுத் திறனை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மேம்படுத்துவது கடினம். ஆனால், உணர்வுசார் நுண்ணறிவைக் கற்றுக்கொள்ளவும், மேம்படுத்தவும் முடியும் என்கின்றனர் உளவியல் ஆராய்ச்சியாளர்கள்.
  • உணர்வுசார் நுண்ணறிவுத் திறனைக் கற்றுக்கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் இளமைப் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள முடியும். நம் உணர்வுகள் அனைத்தும் பயிற்சிக்குக் கட்டுப்பட்டவை என்கிறார் அமெரிக்க உளவியலாளர் காப் மேயர். உணர்வுசார் நுண்ணறிவு என்பது ஓரிரு நாள்களிலோ ஒரு வாரத்திலோ மாறுவதல்ல. முறையான பயிற்சியின் மூலம் மெல்ல மாற வேண்டிய திறன்.
  • நாள்குறிப்பு எழுதுவது, தியானம், இசை கேட்பது, நண்பர்களுடன் சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்வது, நடைப்பயிற்சி, ஆத்திரமூட்டும் அல்லது எரிச்சலூட்டும் இடங்களிலிருந்து உடனடியாக அகன்றுவிடுவது, சென்றடைய வேண்டிய இலக்கை மனதில் நினைத்து, பொறுமை காப்பது என உணர்வுசார் நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள பல வழிகள் உண்டு. உணர்வுசார் நுண்ணறிவின் 5 பண்புக்கூறுகளில் கூறப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும் உங்களுக்குப் பயன் தரும். இந்த 2025ஆம் ஆண்டில் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான திறன்களில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ம் இடம்பெறட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்