TNPSC Thervupettagam

‘எதற்கும் உதவாதவர்கள்’ செய்யும் வேலை

March 3 , 2024 142 days 114 0
  • மார்ச் மாதம் முழுவதும் பெண்களின் வரலாற்றை நினைவுகூரும் மாதமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சாதிய, வர்க்க, பாலினப் பாகுபாடுகள் மலிந்த நம் சமூகத்தில் எழுதப்பட்ட பெண்களின் வரலாறு, இந்தப் பாகுபாடுகளைக் கடந்தது அல்ல. யாரால், எதற்காக வரலாறு எழுதப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது என்பதும் விவாதத்துக்குரியது.
  • சமூகத்துக்குப் பங்களித்த பெண்களின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல பெண்களின் வரலாறு. சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெண்களின் நிலையைப் பேசுவதும் வரலாறுதான். காரணம், நாம் வெற்றிக் கதைகளாகக் கொண்டாடும் பெரும்பாலான நிகழ்வுகள் பெண்களை வதைத்து உருவாக்கப்பட்டவையே. பாலுறவைத் தொழிலாக, மாபெரும் வர்த்தகமாக உலக நாடுகள் மாற்றிய கொடூரமும் பெண்ணுடலைப் பண்டமாக்கி நிகழ்த்தப்பட்டதுதான்.

பதறச் செய்யும் சந்தைகள்

  • எளிமையான கிராமத்துத் திருவிழாக்களின்போது முளைத்துவிடுகிற தற்காலிகக் கடைகளில் தின்பண்டங்களும் விளையாட்டுப் பொருள்களும் கிடைக்கும். ஆனால், உலக நாடுகள் பலவற்றில் நடைபெறுகிற பாலியல் சந்தைகளிலும் திருவிழாக்களிலும் பொருள்களின் இடத்தை மனிதர்களுக்கு அளித்துவிடுவார்கள். பேரம் என்கிற பேச்சுக்கே இடமின்றி சதை வியாபாரம் அங்கே கொடிகட்டும்.
  • எதைப் பார்த்தாலும் வாங்கிக் குவிக்கும் மனிதர்களின் நுகர்வு வெறியோடு ஆண் மனதின் வக்கிரமும் இணைகிற புள்ளியைப் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுகிற இடைத்தரகர்கள் மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வண்ணக் காகிதங்களுக்குள் பொதியப்பட்ட கண்கவர் விற்பனைப் பொருளைப் போலவே பெண்களும் அந்தச் சந்தைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.
  • மனிதர்களின் பாலியல் வக்கிரங்களுக்குத் தீனிபோடும் வகையில் பெரும்பாலான நாடுகளில் ஆண்டுதோறும் பாலியல் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மனித மனத்தின் அவ்வளவு வக்கிரத்தையும் அந்தச் சந்தைகளில் காணலாம். பாலியல் வக்கிரம் மலிந்த கதைகளையும் படங்களையும் பார்த்தவர்கள் அவற்றை நேரில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பாக இந்தத் திருவிழாக்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
  • கலை வடிவங்களில் ஒன்றான திரைப்படங்கள், எல்லாக் காலத்திலும் சமூக நீதியை மட்டுமே பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால், கலைப்படைப்பின் சுதந்திரம் என்கிற போர்வையில் படங்களில் காட்சிப்படுத்தப்படுகிற பெண்ணுடல் குறித்துப் பலருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை. அவற்றைப் பார்த்துத் தூண்டப்படுகிற மனித மனங்களை அடுத்த கட்டத்துக்கு போர்னோகிராபி படங்கள் எடுத்துச் செல்கின்றன. அதையும் நேரில் காணும் வாய்ப்பை இதுபோன்ற பாலியல் திருவிழாக்களும் சந்தைகளும் வழங்குகின்றன.

செயல்படுத்தப்படாத சட்டங்கள்

  • டென்மார்க்கில் நடைபெறும் பாலியல் திருவிழாவில் திரும்பிய திசையெல்லாம் அரை குறை ஆடையோடு மனிதர்கள் இருக்கிறார்கள். தென்னாப்ரிக்கவிலும் ஆஸ்திரேலியாவிலும் புத்தகக் காட்சியைப் போலவே பாலியல் கண்காட்சியை நடத்துகிறார்கள். வகைக்கு ஒன்றாகப் பெண்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
  • ஃபின்லாந்தில் நடைபெறும் ஜெர்மனி, லண்டன், ஸ்பெயின், இந்தோனேஷியா, போலந்து என ஏராளமான நாடுகள் இதுபோன்ற திருவிழாக்களையும் சந்தைகளையும் நடத்துகின்றன. இவை அனைத்தையும் மனிதர்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்கான நடைமுறை என்று நியாயப்படுத்துபவர்களே அதிகம்.
  • ஒருவரது ஆசுவாசம் மற்றொருவரது வேதனையாக இருப்பதுதான் சிக்கல். இது போன்ற திருவிழாகளில் காட்சிப்படுத்தப்படும் பெரும்பாலான பெண்கள் கட்டாயத்தின் பேரில்தான் அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதிலும் கடத்திவரப்பட்ட பெண்களே அதிகம்.
  • உலகின் பல நாடுகளில் இந்தப் பாலியல் வர்த்தகத்தை பெருநிறுவன அமைப்பின் நேர்த்தியோடு செய்து முடிக்கத் தனித் தனி குழுக்களே இருக்கின்றனர். உலகறிந்த அந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உண்டு; ஆனால், அவை செயலாக்கம் பெறுவது கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறும் அற்புதத்துக்கு இணையானது.
  • ஜப்பானின், ‘யாகுசா’, மாபெரும் வலைப்பின்னல் கொண்ட ஆள் கடத்தல் குழு. ஜப்பான் மொழியில் ‘யாகுசா’ என்றால் ’எதற்கும் உதவாத’ என்று பொருள். பெயர்தான் எதற்கும் உதவாததே தவிர, அவர்களது செயல் பெண்ணுடலை ஆதாரமாக வைத்துப் பொருளீட்டுவதுதான்.
  • 5,000க்கும் மேற்பட்ட ‘யாகுசா’ குழுக்கள் ஜப்பான் முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சீனத்தின் ‘டிரையட்ஸ்’ குழுவும் இதற்குச் சளைத்தது அல்ல. இவர்களும் பெண்களைக் கடத்திப் பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபட வைப்பதில் கைதேர்ந்தவர்கள்.
  • இத்தாலி, ரஷ்யா, அல்பேனியா, கம்போடியா, தாய்லாந்து எனப் பல நாடுகளில் போதைப்பொருள் வர்த்தகமும் பாலியல் தொழிலும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன. பாலியல் வர்த்தகத்தில் கோலோச்சும் சில நாடுகள் வெளிநாட்டினரைத் தங்கள் நாடுகளுக்கு வரவழைப்பதற்காக உலகளாவிய திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். என்ன திட்டம் அது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்