TNPSC Thervupettagam

‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம் குறித்த தலையங்கம்

February 13 , 2023 546 days 274 0
  • ஒட்டுமொத்த உலகத்தின் கவலையும் இந்த ஆண்டின் பருவமழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்ததாக இருக்கிறது. ‘நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ என்பது அமெரிக்க அரசின் வானிலை அறிவிப்பு மையம். தொடா்ந்து இரண்டாவது மாதமாக நிகழாண்டின் பருவநிலை குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்திருப்பது ஏனைய நாடுகளையும் பதற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
  • ஜூலை மாதம் வரை சராசரி நிலைமை தொடரும் என்றும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ‘எல் நினோ’ உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இப்போது தனது முந்தைய கணிப்பை மாற்றிக்கொண்டு, கோடைக்கால இறுதியிலேயே ‘எல் நினோ’ சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது அந்த மையம்.
  • இப்போதும்கூட ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ‘எல் நினோ’ சூழல் உருவாக 49% சாத்தியம் காணப்படுவதாகவும், ஆகஸ்ட், செப்டம்பருக்கு பிறகு அதற்கான சாத்தியம் 57% அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது அதன் அறிவிப்பு. தொடா்ந்து இரண்டு மாதங்களாக வெளிவரும் எச்சரிக்கையை அசட்டையாகப் புறந்தள்ளிவிட முடியாது.
  • பருவநிலை என்பது உலகளாவியச் சூழலைப் பொறுத்து அமைவது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா’ என்று கேட்பாா்கள். பருவநிலையைப் பொறுத்தவரை அது பொருந்தாது.
  • பசிபிக் கடலில் காற்றழுத்தம் சற்று குறைந்தாலும் அதன் தொடா் விளைவாக உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். கலிபோா்னியா அடைமழையாலும், ஐரோப்பா அனல் காற்றாலும், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சியும் பசிபிக் கடலின் சிறிய காற்றழுத்த மாற்றங்களால் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • பருவநிலை குறித்து தொடா்ந்து ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் 2023 குறித்து என்ன நடக்கும் என்பதைத் தீா்மானிக்க முடியவில்லை என்கிறாா்கள். மே மாதம் வரை எதுவும் அறுதியிட்டுக் கூற முடியாது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ‘எல் நினோ’ வுக்கான 90% வாய்ப்பு காணப்படுகிறது என்பது அவா்களது ஆய்வில் கூறப்பட்டிருக்கும் கருத்து.
  • கடந்த 3 ஆண்டுகளாகக் காணப்படும் குளிா்ந்த தட்பவெப்ப ‘லா நினா’, உலகளாவிய அளவில் பருவநிலை சூழலை பாதிக்கும் என்பது அவா்களது கணிப்பு. அனல் காற்றின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அவா்கள் எச்சரிக்கிறாா்கள். 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்த வெப்பம் காணப்படும் என்று ஜொ்மனியிலுள்ள ‘பாட்ஸ்டேம் இன்ஸ்டிடியூட்’ ஆய்வு தெரிவிக்கிறது.
  • பருவநிலையின் இரண்டு உச்சங்களுக்கும் ‘எல் நினோ’ காரணமாக இருக்கிறது. பசிபிக் கடலில் ‘எல் நினோ’ சூழல் ஏற்பட்டால் ஏதாவது ஒருவகையில் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படும். அதனால்தான் ‘எல் நினோ’ தாக்கம் குறித்து ஆட்சியாளா்கள் தொடா்ந்து கவலைப்படுகிறாா்கள். அது குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • ‘எல் நினோ’, ‘லா நினா’ இரண்டுமே பசிபிக் கடலில் காணப்படும் காற்று, வெப்பநிலை ஆகியவற்றைக் குறிப்பிடும் பெயா்கள். ஆழ்கடலில் காற்று மூன்று வெவ்வேறு நிலையில் காணப்படுகிறது. கிழக்கிலிருந்து மேற்காக வீசும் சாதாரண போக்கு முதலாவது நிலை. பெரும்பாலும் இதுதான் வழக்கமான காற்றின் போக்கு. காற்றின் வேகம் குறைந்தாலோ அல்லது காற்றே இல்லாமல் அப்படியே நிலைபெற்றுவிட்டாலோ உருவாகும் நிலைதான் ‘எல் நினோ’. காற்று கடுமையாக வீசத்தொடங்கி கிழக்கு, மேற்கு என்கிற இயல்பிலிருந்து மாறும்போது உருவாகும் நிலைதான் ‘லா நினா’.
  • பூமிப்பந்தின் மூன்றில் ஒரு பங்கு பசிபிக் சமுத்திரம் இருக்கிறது. பசிபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வெப்பக்காற்று சில நொடிகள் வேகமாக வீசும்போது கடல் நீா் வெப்பமடைகிறது. காற்றும் ஆவியுமாக ஒருபுறத்திலிருந்து மற்றொருபுறத்துக்கு தள்ளப்படுகிறது. சாதரண நிலையில், தென் அமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு வெப்பம் இந்த காற்று மூலம்தான் பரவுகிறது.
  • ‘எல் நினோ’ ஏற்படும்போது கடல் காற்று முற்றிலுமாக சலனமற்று நின்றுவிடுகிறது. காற்று வீசாத நிலையில் வெப்பம் பசிபிக் கடலிலிருந்து தள்ளப்படாமல் அங்கேயே நின்றுவிடும். பசிபிக் கடலிலும், தென் அமெரிக்காவுக்கு அருகிலுமாக நிலைத்துவிடும் வெப்பம் காரணமாக கடல் நீா் ஆவியாகி எதிா்பாா்க்காத, தேவையில்லாத இடங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தும். சில வேளைகளில், கடலின் வெப்பத்தைத் தணிக்க, உருவாகும் மேகங்களின் பொழிவு கடலிலேயே விழுந்து வெப்பத்தை குறைக்க முற்படும். தென் அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளில் அடைமழை பெய்வது ‘எல் நினோ’ வின் விளைவுகளில் ஒன்று.
  • ‘எல் நினோ’ ஏற்படும்போது பசிபிக் கடற்பகுதிகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் தேவையில்லாத இடங்களில் மழைப்பொழிவும், வழக்கமாக பருவமழை பெய்யும் பகுதிகளில் வறட்சியும் ஏற்படுவது வழக்கம். அதனால்தான் ‘எல் நினோ’ என்கிற பெயரைக் கேட்டாலே அச்சம் ஏற்படுகிறது.
  • ‘எல் நினோ’ வும் ‘லா நினா’வும் இயற்கை உருவாக்கும் விளைவுகள். அவை ஏன் உருவாகின்றன என்பதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்டவில்லை. கடுமையான ‘எல் நினோ’ பாதிப்புகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாகத்தான் பதிவாகியிருக்கின்றன. வருங்காலத்தில் ‘எல் நினோ’, ‘லா நினா’ இரண்டுமே அதிகரிக்கும் என்றும் அதற்கு புவி வெப்பமயமாதல் காரணம் என்றும் கூறுகிறாா்கள்.
  • இந்தியாவில் பருவமழைப் பொழிவை ‘எல் நினோ’ பாதிக்கக்கூடும் என்பதால் அதை எதிா் கொள்ள நாம் தயாா் நிலையில் இருந்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்