‘குதிரை பந்தய’த்தில் ஓடத் தேவையில்லை!
- அதீத வேலைப்பளுவால் பதற்ற மனநிலைக்குத் தள்ளப்பட்ட குமார், அவர் வெளிப்படுத்திய அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ஒரு மனிதனின் சுபாவத்துக்குத் தகுந்தாற்போல் அவர் மனப்பதற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவம் மாறுபடுகிறது. பெரும் பாலானோர் ஏதோ ஒரு வகையில் அதைக் கடந்து செல்கின்றனர். சிலர் எளிதில் மனப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர்.
- மாறும் சூழல்:
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது பற்றி நாம் முன்னரே பேசி இருக்கிறோம். சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலம் சூழலை மாற்றுவதும் மனித குலத்தின் முக்கியமான வளர்ச்சிப் போக்கு. ஆனால், இன்றைய சூழலில் பணியும் பணி சார்ந்த பாரமும் அதிகமாகிவிட்டன.
- கடுமையான பணிச் சூழல், கெடுபிடியான நேரக்கட்டுப்பாடு, குறைவான பணி யாளர்கள், அளவுக்கு அதிகமான வேலை, குறைவான ஓய்வு, உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை போன்றவை பணிச் சூழலில் ஒருவரை அதிகம் பாதிக்கக்கூடிய நெருக்கடிகள். இவை அனைத்தும் ஒருவரைத் தமது வேலையிலிருந்தும் அந்நியப்படுத்துகின்றன.
- பணியிடத்தில் ‘டார்கெட்’, ‘அப்ரைசல்’ என்கிற பெயரில் குதிரை பந்தயம்போல ஓர் ஊழியர் மற்றோர் ஊழியரின் போட்டியாளராக நிறுத்தப்படுகிறார். ‘டார்கெட்’டை அடைவது சாத்தியமல்ல என்பது தெரிந்தும் தான் எட்ட நினைத்ததற்கும் செய்து முடித்ததற்குமான இடை வெளி அதிகமாகும்போது பல்வேறு மனப்பதற்றச் சிக்கல்களுக்கு ஒருவர் ஆளாகிறார். வேலை பற்றிய எண்ணமே மனப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
- ஒரேயோசனையில் மூழ்கிக் கிடப்பதன் காரணமாக, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளிலும் தொய்வு ஏற்படும். கைநடுக்கம், நெஞ்சு எரிச்சல், அடி வயிற்றில் பிசைவது போன்ற உணர்வு, எளிதில் சோர்வடைதல் போன்ற பல்வேறு உடல்ரீதியான உபாதைகளையும் எதிர்கொள்வர்.
- சிகிச்சையின் ஒரு பகுதியாகப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும் உடல் நன்றாகத்தான் இருக்கிறது என்று முடிவுகள் வரும்போதும் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் ஒருவர் ஆளாவார். மனதளவில்தான் பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஏற்றுக் கொள்ள வைப்பதே சவாலான காரியமாக உள்ளது.
மனம் இருந்தால்...
- உடல் நன்றாக இருக்கிறது என்றால் எனக்கு ஏன் இவ்வாறான சிக்கல் வருகிறது, நான் காரணமின்றி இவ்வாறு செய்கிறேனா, என்னால் மட்டும் ஏன்இயல்பாக இருக்க முடியவில்லை, எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு பதற்றம் ஏற்படுகிறது என்பது போன்ற கேள்விகள் ஒருவரின் மனதைத் துளைக்கலாம்.
- இப்படியான ஒரு மனநிலையில் தான் குமார் என்னிடம் வந்தார். நான் முதலில் அவரிடம் கூறியது அவரு டைய இந்த மனப் பதற்றத்துக்கு அவர் மட்டும் காரணம் அல்ல என்பதுதான். சமூக, பொருளாதாரச் சூழல் எவ்வாறு மனிதர்களைப் பல்வேறுவிதமான மனநலச் சிக்கல்களுக்கு ஆளாக்கு கிறது என்பதைப் பற்றியப் புரிதலை முதலில் அவருக்கு ஏற்படுத்தினேன்.
- அவர் எதிர்கொண்ட விஷயங்களும், அவருக்கு ஏற்பட்ட இந்தக் கசப்பான அனுபவமும் அவருக்கானது மட்டுமல்ல என்றும் பெரும்பாலான வேலைக்குச் செல்லும் நபர்களும் அன்றாடம் இதை எதிர்கொள்கின்றனர் என்றும் அவருக்கு எடுத்துரைத்தேன். இந்தப் புரிதலே பிரச்சினையைச் சமாளிப்பதற்கான முதல் படி. புறச்சூழல் பற்றிய புரிதலை ஏற்படுத்தியதற்குப் பிறகு அவரது குறிப்பிட்ட சுபாவக்கூறுகளை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பது குறித்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
- அவரது திறன்களை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான ‘Coping skill strategies’ குறித்த ஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டது. விரைவாக மீள்வதற்குச் சில மருந்து களும் பரிந்துரைக்கப்பட்டன. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பணிச் சூழல், சக பணியாளர்களுடன் அமைப்பாக இருத்தல், வேலையில் பாதுகாப்பு போன்றவைதான் வேலைக்குச் செல்பவரின் மன நலத்தை பேணக்கூடிய முக்கியமான அம்சங்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டு தன்னுடைய தனிப் பட்ட சிக்கல்கள் பற்றிய தெளிவுடன் விடைபெற்றார். அவரால் முடியு மென்றால் உங்களாலும் முடியும் தானே?
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)