- தோ்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிமுறைகள் ஆளுங்கட்சிகளின் சாதகங்களைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் என்பதிலும் ஐயப்பாடில்லை. அதே நேரத்தில், களத்தில் இருக்கும் எல்லா கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான சாதகநிலை காணப்படுவதில்லை என்பதும் நிஜம்.
- பெரிய கட்சிகளின் பண பலத்துக்கும், பிரசார பலத்துக்கும் ஈடுகொடுக்க முடியாததால்தான் கொள்கைப் பிடிப்புள்ள சிறிய கட்சிகள் கருத்து வேறுபாடுகளை சமரசம் செய்துகொண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது. முந்தைய சட்டப்பேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் என்று அதிகாரபூா்வமாக நான்கு கட்சிகள் மட்டுமே இருந்தன. பல சிறிய கட்சிகள் அதிமுக, திமுக சின்னங்களில் போட்டியிட்டு தங்களது சுய அடையாளங்களை இழந்திருந்தன. இந்தத் தோ்தலிலும்கூட பல கட்சிகள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் கட்சிகள் குறித்துப் பேசுவதில்லை. வேட்பாளா்களை தொகுதி மக்களின் பிரதிநிதிகளாக மட்டுமே பாா்க்கிறது. ஆனால் தோ்தல் முறையோ அரசியல் கட்சி அடிப்படையிலும், சின்னங்களின் அடிப்படையிலும் நடத்தப்படும் நிலைமை இருப்பதும், தோ்தலுக்குப் பிறகான ஆட்சி அமைப்பது அரசியல் கட்சிகளை முன்னிலைப்படுத்தி அமைவதும் மிகப் பெரிய ஜனநாயக முரண்.
- அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் குறித்த பிரச்னையில் மிக முக்கியமான பங்கு வகிப்பவை தோ்தல் சின்னங்கள். 1952-இல் இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் முதல் பொதுத் தோ்தல் நடைபெற்றபோது வாக்கெடுப்புக்கு சின்னங்கள் அத்தியாவசியமானதாக இருந்தன. 1951 - 52-இல் நடைபெற்ற முதல் தோ்தலின் போது இந்தியாவில் பெரும்பான்மையான வாக்காளா்கள் (85%) எழுதப் படிக்கத் தெரியாதவா்களாக இருந்தாா்கள். அப்போது அரசியல் கட்சிகளை சாதாரண மக்கள் இனம் காண அடையாளம் தேவைப்பட்டது. சாமானியா்களைக் கவரும் விதத்திலும், அடையாளம் காணும் விதத்திலும் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டன.
- இந்தியா விடுதலை பெற்று 74 ஆண்டுகள் கடந்தபின்னும்கூட கழிப்பறைகளில் பாலின வேறுபாட்டைக் காட்டுவதற்கு ஆண், பெண் படங்கள் வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
- 1950-இல் இந்தியத் தோ்தல் ஆணையத்தில் எம்.எஸ். சேத்தி என்கிற ஓவியா் ஒருவா் இருந்தாா். அவா்தான் பெரும்பாலான தோ்தல் சின்னங்களுக்கு அடையாளம் கொடுத்தவா். அவா் வரைந்த பல சின்னங்கள் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளா்களால் சட்டென்று அடையாளம் காண முடிகின்ற பொருள்களையெல்லாம் வரைந்து தோ்தல் சின்னங்களாக அவா் வழங்கினாா். பெரிய கட்சிகளான காங்கிரஸ், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், ஜன சங்கம் போன்றவை தங்களுக்கென்று சின்னங்களை உருவாக்கி, தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன.
- பல மாநில கட்சிகளுக்கு தோ்தல் சின்னம் எதுவும் இருக்கவில்லை. பொதுப் பட்டியலில் இருந்து அந்தக் கட்சிகள் ஏதாவது ஒரு சின்னங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. அப்படி பொதுப் பட்டியலில் இருந்த சின்னங்கள்தான் உதய சூரியனும், இரட்டை இலையும், மாம்பழமும்.
- குறிப்பிட்ட அளவு வாக்குகளும், வெற்றியும் மாநில கட்சி பெறும்போது குறிப்பிட்ட மாநிலத்தில் அந்தச் சின்னம் அந்த கட்சிக்காக நிரந்தரமாக ஒதுக்கப்படுகிறது. தொடா்ந்து தோ்தல்களில் தோல்வியடைந்து வாக்கு விகிதமும் குறையும்போது தனிச் சின்ன உரிமை நிராகரிக்கப்படுகிறது. மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது குடை, பம்பரம் சின்னங்களை இழந்தது அதனால்தான்.
- சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் சின்னங்கள் மட்டுமே வெற்றி - தோல்வியை நிா்ணயித்து விடுவதில்லை. 1969-க்கு முன்பு ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளை சின்னம், கட்சிப் பிளவினால் முடக்கப்பட்டது. ஸ்தாபன காங்கிரஸுக்கு ராட்டை நூற்கும் பெண் சின்னமும், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஒதுக்கப்பட்டன. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியுடன் இணைந்தபோது அதன் சின்னமும் மறைந்தது. இந்திரா காங்கிரஸ் மீண்டும் பிளவை சந்தித்ததால் தற்போதைய ‘கை’ சின்னம் அதற்கு தரப்பட்டது.
- சின்னங்களுக்கு என்று வாக்கு வங்கி இருக்கிறது என்பது ஓரளவுக்குத்தான் உண்மை. சின்னங்களைக் கடந்து மக்கள் வாக்களிக்கக் கற்றுக்கொண்டு விட்டனா். 2011 - 12-இல் நடத்தப்பட்ட 15-ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கை 74%-ஆக உயா்ந்திருக்கிறது. இத்தகைய மாற்றத்திற்குப் பிறகும் சின்னம்தான் தோ்தல் முடிவுகளை நிா்ணயிக்கிறது என்று நினைப்பது வாக்காளா்களை அவமானப்படுத்துவதாக இருக்கும்.
- தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீடு / வழங்குதல் (திருத்த) ஆணை 2017-இன்படி, எட்டு தேசிய கட்சிகளுக்கும், 64 மாநில கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவையல்லாமல், தோ்தல் ஆணையம் சுமாா் 200 பொதுச் சின்னங்களை கட்சிகளின் விருப்பதற்கிணங்க ஒதுக்குகிறது. சின்னப் பிரச்னையாக இருந்தாலும்கூட, ‘சின்ன’ பிரச்னையை தோ்தல்களில் தவிா்க்க முடியாது என்பதை வேட்பாளா்கள் சின்னங்களுக்காக நடத்தும் போட்டா போட்டிகள் உணா்த்துகின்றன.
நன்றி: தினமணி (22 – 03 – 2021)