TNPSC Thervupettagam

‘சிப்லா’ யூசுப் ஹமீது: இந்திய மருத்துவ உலகின் ராபின் ஹூட்

August 28 , 2023 454 days 268 0
  • மேலை நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய மருந்துத் துறையை ஜனநாயகப் படுத்தி, மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு கொண்டு சேர்த்தவரைப் பற்றிய கதை இது.
  • 1990-களின் பிற்பகுதி. எய்ட்ஸ் மிகத் தீவிரமாக பரவத் தொடங்கிய காலகட்டம் அது. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எய்ட்ஸுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துவந்தது. விலை ஒரு ஆண்டு பயன்பாட்டுக்கு 12 ஆயிரம் டாலர். அப்போதைய இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம்.
  • ஆப்பிரிக்க மக்களால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அந்த மருந்தை வாங்க முடியவில்லை. இதனால், நோய்க்கு பலியாகிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தன. இந்தச் சூழலில், எய்ட்ஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு கூட்டம் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தது. செப்டம்பர் 28, 2000-ல் நடந்த அந்தக் கூட்டத்தில் உலகளாவிய அரசியல் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
  • இந்தியாவிலிருந்து, சிப்லா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் யூசுப் ஹமீது அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் பேச அவருக்கு 3 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
  • யூசுப் ஹமீது பேசலானார், “இன்று எய்ட்ஸுக்கான அமெரிக்க மருந்தின் ஒரு ஆண்டு பயன்பாட்டுக்கான விலை 12 ஆயிரம் டாலர். இதனால், ஏழை நாடுகளால் இந்த மருந்தைப் பயன்படுத்த முடிவதில்லை. சிப்லா நிறுவனம் எய்ட்ஸ் மருந்தை 800 டாலருக்கு வழங்கும். எங்களது மருந்துத் தயாரிப்பு முறையை எந்த நாட்டுடனும் இலவசமாக பகிர தயாராக இருக்கிறோம்.
  • அமெரிக்க நிறுவனத்தின் எய்ட்ஸ் மருந்து விலைக்கும் சிப்லாவின் மருந்து விலைக்கும் மலையளவு இடைவெளி. இதனால், சிப்லாவின் மருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடிவாக அமைந்தது. படிப்படியாக, எய்ட்ஸ் மருந்துஉருவாக்கத்தில், அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தை சிப்லா முடிவுக்குக் கொண்டுவந்தது. இதன்வழியாக சிப்லா நிறுவனம் உலக அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
  • சிப்லாவின் 88 ஆண்டுகால வரலாற்றைஎடுத்துப்பார்த்தால், அது தொடர்ச்சியாக மருந்துத் துறையில் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து செயல்பட்டு வந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். மருத்துவ ஆராய்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்த இந்தியாவில், சிறிய அளவில் உருவான ஒரு நிறுவனம், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தகர்த்ததோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் மிக அரிதான மருந்துகளை மிகக் குறைந்தவிலையில் வழங்கும் நிறுவனமாக எப்படி உருவெடுத்தது?

சுயசார்பே லட்சியம் 

  • யூசுப் ஹமீதின் தந்தை குவாஜா அப்துல் ஹமீது தீவிர காந்தியாளர். ஜெர்மனியில் வேதியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், அங்கு யூத இனத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
  • இந்தியா திரும்பிய குவாஜா, மும்பையில் 1935-ம் ஆண்டு, சிப்லா நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த சமயத்தில் இந்தியாவுக்கு மருந்துகள் வெளிநாடுகளிலிருந்தே வந்து கொண்டிருந்தன. மருந்துத் துறையில் நாட்டை சுயசார்பு உடையதாக மாற்ற வேண்டும். இந்திய மக்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும்என்ற கனவுடன் நிறுவனத்தைக் கட்டமைக்கலானார் குவாஜா.
  • அவர் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் பலருடன் நெருங்கிய உறவில் இருந்தார். ஒருநாள் காந்தி குவாஜாவின் சிப்லா தொழிற்சாலைக்கு வருகைதந்தார். ஆண்டு 1939. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயம். அதில் பிரிட்டன் முக்கிய அங்கம் வகித்துவந்தது. அப்போது, காந்தி குவாஜாவிடம் சொல்கிறார், “நம்நாடு சுதந்திரம் அடைய வேண்டும். பிரிட்டனுக்கு இந்தப் போரில் நாம் உதவினால், அது விரைவிலேயே நமக்கு சுதந்திரம் வழங்கக் கூடும்.
  • நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் காந்திஜி’’ என்கிறார் குவாஜா.இந்தப் போரில் காயமடையும் வீரர்களுக்கான மருந்துகளை சிப்லா நிறுவனம் தயாரித்து வழங்க வேண்டும்என்று காந்தி கூறவும், அதை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கினார் குவாஜா. இரண்டாம் உலகப் போருக்குத் தேவையான மருந்துகளை தயாரிப்பதன் வழியாக, படிப்படியாக, இந்திய மக்களுக்கான அத்தியாவசியமான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் உருவெடுக்கிறது சிப்லா. மகன் யூசுப் ஹமீது சிப்லாவில் இணைந்த பிறகு, நிறுவனம் புதிய பரிணாமம் எடுக்க ஆரம்பித்தது.

யூசுப் ஹமீதின் வருகை 

  • கேம்பிரிட்ஜில் வேதியியல் துறையில் பட்டம்பெற்றுவிட்டு, 1960-ம் ஆண்டு இந்தியா திரும்புகிறார் யூசுப் ஹமீது. கேம்பிரிட்ஜில் அவருக்கு பேராசிரியராக இருந்தவர், வேதியியலுக்கு நோபல் பரிசு பெற்ற லார்ட் டோட் (Lord Todd). இதனால், வேதியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார் யூசுப்.
  • இந்தியா திரும்பிய அவருக்கு, நாட்டின் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. இந்திய மருந்து சந்தையில் 80 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களின் வசம் இருந்தது. மருந்துக்கு வெளிநாட்டை நம்பி இருப்பது யூசுப்புக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. இந்தச் சூழலை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். தந்தை வழியில், இந்தியாவை மருந்துத் தயாரிப்பில் சுயசார்புமிக்கதாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டார்.
  • ஆனால், அந்தப் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனென்றால், இந்தியா சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகள்தான் ஆகி இருந்தன. புதிய மருந்துகளை கண்டுபிடித்து உருவாக்கும் அளவுக்கு இந்தியா மருத்துவ ஆராய்ச்சிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.
  • இந்தச் சூழலில், நாட்டுக்கான மருந்துத் தேவையை வெளிநாட்டு நிறுவனங்களைச் சாராமல் பூர்த்திச் செய்வது எப்படி? அவருக்கு ஒரே வழிதான் இருந்தது.
  • சிப்லா நிறுவனத்துக்கு வருகை தந்த காந்தியுடன் யூசுப் ஹமீதின்
  • தந்தை குவாஜா அப்துல் ஹமீது.

சட்டத்தை மாற்றுங்கள் பிரதமரே 

  • இதய நோய், நுரையீரல் பிரச்சினை உட்பட பல்வேறு நோய்களுக்கு மேற்கத்திய நாடுகள் கண்டுபிடித்த மருந்துகளின் மூலக்கூறுகளை நகல்செய்து, இந்தியாவில் புதிய மருந்துகளை உருவாக்கினார் யூசுப். அதை மிகக் குறைந்தவிலையில் விநியோகம் செய்தார். இதையறிந்த பன்னாட்டு நிறுவனங்கள் சிப்லாவுக்கு எதிராக கொதித்தெழுந்தன. சிப்லாவை முடக்கும் முயற்சியில் இறங்கின.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசிஐ நிறுவனம் இதய நோய்க்கு உருவாக்கிய புரோபனலால்’ (Propranolol) மருந்தை, நகல்செய்து யூசுப் ஹமீது இந்தியாவில் குறைந்தவிலையில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து ஐசிஐ நிறுவனம் யூசுப் மீது வழக்குத் தொடுத்தது.
  • அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அவரிடம் யூசுப் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மேற்கத்திய நாடுகளை நாம் சார்ந்திருக்க வேண்டாம். இந்திய காப்புரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவாருங்கள்.
  • 1972-ம் ஆண்டு, இந்திரா காந்தி, “இனி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதன் தயாரிப்புக்கு காப்புரிமை கோர முடியாது. மருந்து உருவாக்கத்துக்கான செயல்முறைக்கு மட்டுமே காப்புரிமை பெற முடியும்என்று புதிய காப்புரிமை சட்டத்தை கொண்டுவந்தார்.
  • இந்தியாவில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் எழுச்சி பெறுவதற்கு இந்தச் சட்டம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. 1960-களில் இந்திய மருந்து சந்தையில் 80 சதவீதப் பங்கு வெளிநாட்டு நிறுவனங்களின் வசமிருந்த நிலையில், 2004-ல் அது 20 சதவீதமாக குறைந்தது.
  • புதிய சட்டத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் அதன் மருந்து உருவாக்கத்துக்கான செயல்முறைக்கு மட்டுமே காப்பீடு கோர முடியும் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துக்கான மூலக்கூறுகளை கண்டறிந்து, அதை உருவாக்கும் செயல்முறையில் சிறு மாற்றங்களை மேற்கொண்டது சிப்லா. இதனால், சட்டரீதியாக மேற்கத்திய நிறுவனங்கள் சிப்லா மீது வழக்குத் தொடுக்க முடியாமல் போனது.

ஏழை நாடுகளுக்கு அவர் ராபின் ஹூட் 

  • இந்நிலையில், மேற்கத்திய நாட்டு நிறுவனங்கள் யூசுப் ஹமீதை திருடர் என்று முத்திரை குத்தி அவமதித்தன. சிப்லாவை முடக்கும் நடவடிக்கையில் இறங்கின.
  • புதிய மருந்துகளை கண்டிபிடித்து அதற்கு காப்புரிமை பெறும் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம்தான். அதைநான் மறுக்கவில்லை. ஆனால், காப்புரிமை கொண்டிருப்பதனாலேயே அந்நிறுவனங்கள் மருந்துத் துறையில் ஏகபோக உரிமைகொண்டாடுவதை நாம் அனுமதிக்கக்கூடாது. அது மனிதகுலத்துக்கு இழைக்கும் அநீதிஎன்ற நிலைப்பாட்டை யூசுப் ஹமீது கொண்டிருந்தார். அதனால், அவர் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், தன் பாதையில் மிக உறுதியாக இருந்தார்.
  • மேற்கத்திய நாடுகளின் முத்திரை குத்தல்களுக்கு யூசுப் இப்படி பதிலளித்தார்: "என்னைதிருடர் என்று மேற்கத்திய நிறுவனங்கள் கூறுகின்றன. என்னுடைய 50 ஆண்டு கால அனுபவத்தில் நான் எந்த நாட்டுச் சட்டங்களையும் மீறியதில்லை. நான் சட்டத்தை மீறி செயல்பட்டிருந்தால் எப்போதோ நான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் இந்தியாவில் இந்திய மண்ணின் விதியை கடைபிடிக்கிறேன்.
  • உங்கள் அமெரிக்காவின் விதியை இந்தியாவில் நான் கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் என்னை நிர்பந்தித்தால் நீங்கள் அமெரிக்காவில் இந்திய விதியை கடைபிடியுங்கள் என்று நான் உங்களைக் கூறுவேன். அமெரிக்க சட்டப்படி நாங்கள் உங்களுக்கு திருடர் என்றால், இந்திய நியாயப்படி, நீங்கள் எனக்கு மோசடியாளர்கள்தான்."
  • மிகக் குறைந்த விலையில், மருந்துகள் வழங்கியதால் சிப்லா நிறுவனத்தின் மீது உலக அளவில் மிக நல்ல மதிப்பு இருந்தது. உலக சுகாதார அமைப்பு சிப்லாவின் எய்ட்ஸ் மருந்தை தரமானது என்று அங்கீகரித்தது. ‘‘மேலைநாட்டு நிறுவனங்கள் யூசுப்பை திருடராக பார்த்த நிலையில், ஏழைநாடுகள் அவரைராபின் ஹூட்டாக பார்த்தன’’ என்கிறார் பத்திரிகையாளரும், ஐநாவின் சவுத் சென்டர்' அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான மார்ட்டின் கோர் (Martin Khor).
  • இந்திய மருந்துத் துறையில் யூசுப் ஹமீது வழங்கிய பங்களிப்புக்காக, இந்திய அரசு அவருக்கு 2005-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 2020-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், அதன் வேதியியல் துறைக்கு யூசுப் ஹமீதின் பெயரைச் சூட்டியது.
  • இன்று இந்தியாவின் மிக முக்கியமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சிப்லா உள்ளது. சிப்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. 65வகையான சிகிச்சைகளுக்கு சிப்லா மருந்துகள்தயாரிக்கிறது. உலகளவில் 47 இடங்களில் மருந்துத் தயாரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உட்பட 87 நாடுகளுக்கு சிப்லாவின் மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.
  • இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சிப்லாவின் பயணத்தில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ப்ளாக்ஸ்டோன், சிப்லா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
  • வரலாற்று முரண்: மேலைநாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு இந்திய அரசு மருந்து காப்புரிமைச் சட்டத்தில் மாற்றம் செய்தது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதன் மருந்து செயல்முறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மருந்துக்கும் காப்புரிமை செய்துகொள்ளலாம். காப்புரிமை காலம் முடியும்வரை, அந்த மருந்துகளின் மூலக்கூறுகளை நகல்செய்வது சட்டவிரோதம்.
  • இதனால், 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியமருந்துத் துறையின் போக்கு மாறத் தொடங்கி விட்டது. சிப்லா, முன்பிருந்தது போல் அதிரடிநடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. வயது மூப்பின் காரணமாக, யூசுப் ஹமீது 2013-ம்ஆண்டு சிப்லாவின் நிர்வாக பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தச் சூழலில், சிப்லா நிறுவனத்தை வாங்க ப்ளாக்ஸ்டோன் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுவருகிறது.
  • மேலை நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்த சிப்லாவை, ஒரு அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்த இருப்பது ஒரு வரலாற்று முரண்.
  • மேலை நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய மருந்துத் துறையை ஜனநாயகப் படுத்தி, மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு கொண்டு சேர்த்தவரைப் பற்றிய கதை இது.

நன்றி : இந்து தமிழ் திசை (28– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்