- தகவல்களை மட்டுமல்ல, தகவல்களின் பகுதியை மறைப்பதும் குற்றம். இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் காட்டப்படும் கவனம், பொதுவெளியில் காட்டப்படுவது இல்லை. பல சமயம் அது சாமர்த்தியமாகவும் கருதப்படுகிறது. இடம், பொருள், சூழல் முதலியவற்றை விவரிக்காமல் முழுமையிலிருந்து ஒரு சொற்றொடரை மட்டும் உருவி எடுத்து, தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகின்றனர். முன்பு எழுத்துலகில் மட்டும் நிலவிவந்தது, இந்த மறைப்புச் செயல். இன்றைக்குத் தொலைக்காட்சி விவாதங்களிலும் யூடியூப் அலைவரிசைகளிலும் இப்படிப்பட்டவற்றை அடிக்கடி கண்ணுறுகிறோம்.
- பெரியார் கூறியனவாகக் காட்டப்படும் பல மேற்கோள்கள் இந்த விதத்தில் மிக அதிகம். அதன் உண்மைத் தன்மையைத் தேடிக் கண்டுபிடித்து நிலைநாட்டுவதற்குள், அந்த வதந்தி ஊர் சுற்றி முடித்துவிடுகிறது. பாரதியார் தொடர்பிலும் இது மாதிரியான ஒரு உதாரணம் பிரபலமானது. ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்று பாரதியார் அப்போதே ஆரூடம் கூறிவிட்டார் என்பர் சிலர். நாற்பது ஆண்டுகளாக இந்த அபத்தத்தை நானும் கேட்டு வருகிறேன். ‘என்று அந்தப் பேதை உரைத்தான்’ என அடுத்து வரும் மூன்றாவது தொடரை அவர்கள் சொல்வதேயில்லை. அல்லது அது பாரதியாரின் மேற்கோள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. குறிப்பிடப்படும் அந்தப் ‘பேதை’யின் பெயரையும் கண்டுபிடித்து தொ.மு.சி.ரகுநாதன் ஆதாரத்துடன் எழுதிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எனினும், இந்த மேற்கோள் உலா நின்றபாடில்லை.
- தொடர்களை எடுத்து முழங்குபவர் முழுப் பாட்டையும் சொல்ல மாட்டார்; அவற்றைத் தெரிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை. ‘உடன்பிறந்தே கொல்லும் வியாதி’ என்ற ஒரு தொடர் பிரபலமானது. அத்தொடரை அறியாதார், தமிழ் அறியாதார். அதை எழுதியவர் யார், அத்தொடர் இடம்பெறும் பாடல் எது என்பதை அறிவது பயன் தரலாம்.
- ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா / உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா / மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும் / அம்மருந்து போல்வாரும் உண்டு’ - இப்பாடல் மூதுரையில் (20) ஔவையாரால் பாடப்பட்டது. யாவரும் கேளிர் என்ற ஒப்பற்ற தத்துவத்தின் வேறு வடிவம் இப்பாடல். கூட இருந்துகொண்டே நோயாகக் கொல்பவரும் உண்டு; அந்நியராக இருந்து மருந்தாக உயிர் தருபவரும் உண்டு. அந்நியர் எவரையும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்பது முழுப் பாடல் காட்டும் தொனி.
- ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக் குடி’ என்ற இன்னொரு தொடர் தமிழ்ப் பெருமிதத்தின் புகழ்மிக்க ஒரு கூற்று. தமிழ்நாட்டில் அது வழங்காத நாள் இல்லை என்றொரு காலம் இருந்தது. இதையொட்டி, அதற்கு எதிராகவும் வசனங்கள் உண்டு. உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று சொன்னால்தான் நம்மவருக்குத் திருப்தி என்றாரும் இருந்தனர். இந்தத் தொடர் புறப்பொருள் வெண்பா மாலையில் ஐயனாரிதனார் எழுதியது.
- ‘பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் / வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் / கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு / முன்தோன்றி மூத்தக் குடி’ - இரும்புக் காலத்திலேயே தமிழர் தோன்றிச் சிறந்திருந்தனர் என்கிறது காலமும் காட்டும் இப்பாடல்.
- ‘கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு’ என்பது நம் நாட்டில் புலமை அடக்கத்துக்குச் சான்றாகக் காட்டப்படும் வழிவழி வரும் ஒரு மேற்கோள். இதை எழுதியவர் ஔவை என்பது அறிந்ததே.
- ‘கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று / உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள் - மெத்த / வெறும் பந்தயம் கூற வேண்டாம்; புலவீர் / எறும்பும் தன் கையால் எண் சாண்’ - என்பது பிரபலமாகாத அந்த முழுப் பாடல்; ஔவையின் தனிப்பாடல்.
- நட்போடு நடப்பதும் கருணையோடு இயங்குவதும் வள்ளல் தன்மையுடன் வாழ்வதும் பிறவிக் குணங்கள் என்பது ஔவையின் மரபுசார் கருத்து. இதை வலியுறுத்த வந்தவர் சித்திரமும் செந்தமிழும் பழக்கத்தன என்று மறுதலையாக வேறு சில சொன்னார்.
- ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் / வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் / நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் / கொடையும் பிறவிக் குணம்’ - இக்கருத்தை நாம் மறுக்க விரும்பலாம். ஆனால், பாடலைத் தெரிந்துகொள்வதில் என்ன பிரச்சினை?
- ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது பட்டினத்தாரின் வாக்கு என்று சொல்வர். ஆனால், அதற்கு முன்பே அது தமிழில் பயின்றது உண்டு. அதை அவரே சொன்னதையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்கு அடுத்த வரியையும் வாசிக்க வேண்டும். ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்னும் / ஆப்த மொழி ஒன்று கண்டால் - என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை / இனி தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன்’ - என்பன அப்புகழ்பெற்ற தொடரும் சொற்களும் ஆகும்.
- ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது அண்ணா சொன்னது என்பர். திருமூலரின் சொற்களான அவற்றை அண்ணா வெகுமக்கள் தளத்தில் பிரபலப்படுத்தினார். திருமந்திரத்தின் பல தொடர்கள் தமிழில் பழமொழிகள்போல வழங்கிவருகின்றன. அதில் ஒன்று அது.
- வியாச பாரதத்தைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்து வெளியிடச் செய்தவர் ம.வீ.ராமானுஜாச்சாரியார். அதன் முன்னுரையில் ‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’ என்ற தொடரை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்தத் தொடரின் ‘நதிமூலம்’ அறிய பல்லாண்டுகளுக்கு முன் நான் பட்ட சிரமம் மறக்க முடியாதது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. கூகுளாரிடம் கேட்டால் அவர் அரை நொடியில் விவரம் சொல்லிவிடுகிறார். நீதிநெறி விளக்கத்தில் வரும் அத்தொடர் கொண்ட முழுப் பாடலும் சில நொடிகளில் இன்று திரையில் வந்துவிடுகிறது. எனவே, பாடலை முழுதறிந்து பயன்படுத்துவது இன்று எளிது.
- பாதியைச் சொல்லித்தான் பரபரப்பு ஏற்படுத்துவேன் என்றால் பழைய புலவன்போல ‘அறம்’ பாட வேண்டியதுதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 05 – 2024)