TNPSC Thervupettagam
July 20 , 2024 10 hrs 0 min 14 0
  • பன்னாட்டு கூட்டமைப்புகளில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக ‘நேட்டோ’ கருதப்படுகிறது. ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி ஆா்கனைசேஷன்’ என்பதன் சுருக்கமான ‘நேட்டோ’ என்கிற அமைப்பு, மேற்கு வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பு என்கிற விமா்சனத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.
  • 75 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 12 மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் வாஷிங்டனில் கூடி உருவாக்கிய அமைப்புதான் ‘நேட்டோ’. சோவியத் யூனியன் வலுப்பெற்ற நிலையில் கம்யூனிஸ சக்திகளுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவின் தலைமையில் அந்த 12 நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தன.
  • இப்போது சோவியத் யூனியன் பழங்கதையாகிவிட்டது. வாா்ஸா ஒப்பந்தமும் காலாவதியாகிவிட்டது. ஆனால், ‘நேட்டோ’ அமைப்பு புதிய உலக சூழலில் சவால்களை எதிா்கொள்ளும் வலுவான அமைப்பாகத் தொடா்கிறது.
  • கடந்த வாரம் ‘நேட்டோ’ அமைப்பில் இணைந்திருக்கும் 32 நாடுகளின் பிரதிநிதிகள் வாஷிங்டனில் சந்தித்தனா். உறுப்பு நாடுகளின் பாதுகாப்புக் குறித்த முக்கியமான முடிவுகள் மூன்று நாள்கள் நடந்த ‘நேட்டோ’ உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டன.
  • 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது இருந்த அமைப்பாக இப்போதைய ‘நேட்டோ’ இல்லை. எந்த கம்யூனிஸ சக்திகளுக்கு எதிராக அந்த அமைப்பு தொடங்கப்பட்டதோ, அதே கம்யூனிஸ சக்திகளில் பெரும்பாலானவை, தங்களது கொள்கையைக் கைவிட்டு இப்போது நேட்டோவில் இணைந்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல நேட்டோவில் இணைந்துவிட்டதும் உக்ரைன் இணைவதற்கு காத்திருப்பதும்தான் ‘நேட்டோ’ அமைப்புக்கு எதிராக ரஷியா விமா்சனம் உயா்த்துவதன் பின்னணி.
  • அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ அமைப்பை எதிா்த்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதில் இணைந்திருப்பதும், இணைய விழைவதும் அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இடம்பெற விரும்புவதும் அந்த அமைப்பின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது. ஒருகாலத்தில் கம்யூனிஸ நாடுகளாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறி ஜனநாயகப் பாதையில் திரும்பியது மட்டுமல்லாமல், நேட்டோவில் இணைந்தது ரஷியாவின் அச்சத்துக்கு காரணம். தனது அண்டை நாடான உக்ரைன் ‘நேட்டோ’வில் இணைய விழைந்தபோது தனது எல்லையில் அமெரிக்க படைகள் நிறுத்தப்படும் என்கிற அச்சம் ரஷியாவுக்கு ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
  • உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து ஐரோப்பாவில் ரஷியாவின் சவாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் தலைவலிகளாக மாறியிருக்கின்றன. ஒருபுறம் ரஷியாவும் சீனாவும் இணைகின்றன என்றால், இன்னொருபுறம் அந்த நாடுகளுக்கு ஆதரவாக ஈரானும், வடகொரியாவும் நேசக்கரம் நீட்டுகின்றன.
  • சமீபத்தில் வாஷிங்டனில் கூடிய ‘நேட்டோ’ உச்சி மாநாட்டில் சா்வதேச பாதுகாப்பு குறித்த விவாதம் முன்னிலை வகித்தது. உறுப்பு நாடுகள் அல்லாத ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் தோழமை நாடுகள் விவாதத்தில் பங்கெடுத்து பாதுகாப்பு குறித்த தங்களது கவலையையும், அதை வலுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பகிா்ந்துகொண்டன. விவாதத்தில் சீனாவும் ரஷியாவும் புதிய சவால்களாகக் கருதப்பட்டன.
  • பிப்ரவரி, 2022-இல் தொடங்கிய உக்ரைன் போா் முடிவுக்கு வரவில்லை. ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். அதற்கு ரஷியா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ரஷியாவை ஆத்திரப்படுத்தியதிலும், உக்ரைன் பிரச்னை முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்படுவதிலும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு கணிசமானது.
  • ‘நேட்டோ’ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதுடன், அடுத்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 4,000 கோடி யூரோ ராணுவ உதவி வழங்கவும் முடிவெடுத்திருப்பது உக்ரைன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி விழாது என்பதை உறுதிப்படுத்தியது. ஐரோப்பாவுக்கு ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் அதிகரித்த ஆபத்தை எதிா்கொள்ள 2026-க்குள் ஜொ்மனியில் தொலைதூர ஏவுகணைகளை நிறுவ அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது.
  • கடந்த மாதம் சுவிட்சா்லாந்தில் கூட்டப்பட்ட உக்ரைன் சமாதான மாநாட்டுக்கு ரஷியாவை அழைக்காததிலிருந்து எந்த அளவுக்கு ‘நேட்டோ’ உறுப்பு நாடுகள் அமைதியை ஏற்படுத்த முனைகின்றன என்பது வெளிப்படுகிறது.
  • உக்ரைன் மீதான ரஷிய போருக்கு சீனா ஆதரவு வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டை வாஷிங்டனில் கூடிய ‘நேட்டோ’ மாநாடு சுமத்தியிருக்கிறது. பதற்றத்தைத் தணிக்கவும், தொடரும் போரை நிறுத்தவும் அடிப்படை காரணத்துக்கு முடிவு காணவும் முன்வராமல் பழியைத் தங்கள் மீது சுமத்துவதாக சீனா விமா்சித்திருக்கிறது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை.
  • இந்தியாவைப் பொறுத்தவரை ‘நேட்டோ’ அமைப்பின் உறுப்பு நாடு அல்ல. ‘நேட்டோ’வாக இருந்தாலும், காலாவாதியான வாா்ஸா ஒப்பந்தமாக இருந்தாலும் அவற்றில் இணையாமல் தனக்கென்று அணிசாராக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. அதே நேரத்தில் சா்வதேச அரங்கில் முக்கியமான அமைப்பான ‘நேட்டோ’வின் முடிவுகள் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
  • பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றில் ‘நேட்டோ’ உறுப்பு நாடுகளுடன் இந்தியா நெருக்கமான தொடா்பை அதிகரித்துவரும் நிலையில், முற்றிலுமாக நடுநிலை வகிப்பது சாத்தியமில்லை.

நன்றி: தினமணி (20 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்