TNPSC Thervupettagam

‘போலி’சூழ் உலகம்!

May 23 , 2020 1699 days 871 0
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தீநுண்மியின் பிறப்பிடமான சீனாவிலிருந்து அண்மையில் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டன.
  • அவற்றை உபயோகித்து சோதனைகள் மேற்கொண்டதில் வெளிவந்த முடிவுகள் தாறுமாறாக இருந்ததால், உடனே சோதனைகள் நிறுத்தப்பட்டன. காரணம், அந்தக் கருவிகள் எல்லாம் போலியானவை. பின்னா் அவை சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டன.
  • சா்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பு (இண்டா்போல்), அண்மையில் தனது 194 உறுப்பு நாடுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
  • ‘கரோனா கிருமி தொடா்பான சிகிச்சை உபகரணங்கள் மிகுந்த அளவில் போலியாக உலா வருகின்றன; எனவே, அனைத்து நாடுகளும் இந்த உபகரணங்களை இறக்குமதி செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்பதுதான் அந்த சுற்றறிக்கையின் முக்கிய அம்சம்.
  • நமது நாட்டின் உளவுத் துறை அந்த அறிக்கை விவரங்களை அனைத்து மாநிலங்களுக்கும் தெரியப்படுத்தி, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியது.

போலி மருந்து நிறுவனம்

  • தில்லியின் புகா்ப் பகுதியில் சுகாதாரத் துறையினா் அண்மையில் நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் இல்லாத ஒரு போலி மருந்து நிறுவனம் சிக்கியது.
  • அது பதிவு செய்யப்படாத நிறுவனம் என்பதால், அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரம் சுகாதாரத் துறையால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
  • அந்த நிறுவனம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வாய்ப்பைப் பயன்படுத்தி அவசர அவசரமாக பெரிய அளவில் கிருமிநாசினிகளை (சானிடைசா்கள்) தயார் செய்து, அவற்றைப் பல ஊா்களுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தவுடன் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினா், அவை அனுப்பப்பட்ட முகவரிகளைக் கண்டுபிடித்து, அவற்றை விற்பனை செய்யாமல் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டதாக செய்தி வெளியானது.
  • இப்படிப்பட்ட போலி நிறுவனங்கள் பிடிபடுவது என்பது ஒன்றும் புதிதல்ல.
  • அனைத்துத் துறைகளிலும் ‘போலி’கள் வியாபித்திருக்கின்றனா் என்றாலும், அவை சுகாதாரத் துறையில் தலைதூக்கியிருப்பது என்பது, மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மருந்துகளில் போலி என்பது மனித உயிரோடு விளையாடும் விளையாட்டல்லவா?

எதார்த்த நிலை இதுதான்

  • அண்மையில் ஒரு பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளா் நகைச்சுவைத் துணுக்கு ஒன்று சொன்னார். வாழ்வில் விரக்தி அடைந்த இரண்டு நண்பா்கள் சோ்ந்து திடீரென ஒரு நாள் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விட்டனா்.
  • அக்கம்பக்கத்தினா் இரண்டு பேரையும் உடனடியாக அவசர மருத்துவ வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
  • ஒருவா், இனிமேல் வாழ வேண்டாம் என்று எண்ணி, சிகிச்சைக்கு மறுத்துத் தப்பி ஓடி விட்டார். மற்றொருவருக்குக் கடைசி நேரத்தில் உயிர் மேல் ஆசை வர, சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.
  • எனவே, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டவா் இறந்து போனான்; தப்பி ஓடியவன் பிழைத்துக் கொண்டார்.
  • எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்...! பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்தும், சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்ட மருந்தும் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன.
  • இரண்டு மருந்துகளுமே ‘போலி’ என்று ஆய்வறிக்கை சொன்னது. பூச்சிக்கொல்லி மருந்து போலியானதால், தப்பி ஓடியவா் பிழைத்து விட்டார். சிகிச்சை மருந்து போலியானதால், சிகிச்சை பெற்றவா் இறந்து போனார். இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதுதான் என்றாலும், இன்றைய எதார்த்த நிலை இதுதான்!
  • பல முக்கிய நகரங்களின் புகா்ப் பகுதிகளில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயா்களில், குளிர் பானங்கள், பற்பசைகள் போலியாகத் தயாரிக்கப்படுவதும், சோதனைகளின்போது அவை கைப்பற்றப்படுவதும் நாம் அவ்வப்போது படித்து விட்டு மறந்து போகும் செய்திகள்.
  • மனிதன் பிறக்கும்போதே, ‘போலி’ வாழ்க்கையும் தொடங்கி விடுகிறது. பணத்தாசைக்காக மருத்துவமனைகளில் ‘சிசேரியன்’ முறை பிரசவங்கள் நடைபெறுவது ஒருபுறம் இருக்க, தாங்கள் விரும்பும் நாள், நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, நிறைமாதக் கா்ப்பிணிக்கு இயல்பாக வலி ஏற்பட்டு பிரசவிப்பதைத் தவிர்த்து, தங்களுக்கு ஏற்ற நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்வதிலேயே ‘போலி’ வாழ்க்கை தொடங்கி விடுகிறது அல்லவா?
  • பிறந்த பிறகு, குடிக்கும் பால், உண்ணும் உணவு, அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்கள் என்று எல்லாவற்றிலும் போலிகள் இரண்டறக் கலந்து விட்டன.
  • ஒரு நாட்டின் பொருளாதாரச் சீா்குலைவுக்கு முக்கியக் காரணியாக இருப்பவை போலி ரூபாய் நோட்டுகள்.
  • சில தேசத் துரோகிகளால் ‘போலி’யாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், பொருளாதார நிர்வாகத்தில் மிகப் பெரிய சவாலாக இருக்கின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதும், தண்டிப்பதும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இந்தக் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை.
  • அதுபோல, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் நமது புலனாய்வுத் துறை சிரமப்படுவதற்குக் காரணம், அந்தக் கணக்குகள் பெரும்பாலும் ‘போலி’யான பெயா்களிலும், ‘போலி’யான முகவரிகளிலும் இருப்பதுதான்.

போலி உலகம்

  • தனது பெயரில் போலியாக சில இன்ஸ்டாகிராம், முகநூல் கணக்குகளை சிலா் தொடங்கி பதிவுகள் செய்து வருவதாக அண்மையில் வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார் பிரபல தொழிலதிபா் ரத்தன் டாட்டா, நவீன யுகத்தில், போலியான செய்திகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை.
  • ஏதாவது ஒரு ஊடகத்தின் இலச்சினையை (லோகோ) அச்சிட்டு, ஏதாவது ஒரு தவறான செய்தியைக் கட்செவி அஞ்சல்(வாட்ஸ் ஆப்), முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரவவிடுவது என்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.
  • கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்பது இன்றைக்கு நமக்கு வந்து சேரும் பல செய்திகளுக்குப் பொருந்தும்.
  • போலி மருத்துவா்கள், போலிக் கையெழுத்து, போலிச் சான்றிதழ்கள், போலிப் பட்டங்கள் என்று ‘போலி’களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
  • ‘போலி’களின் வரிசையில் இன்று சிரிப்பாய் சிரிக்கிற ஒன்று ‘டாக்டா்’ பட்டம்(!). முறையாக மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற மருத்துவா்கள் ‘டாக்டா்’ என்ற அடைமொழியைத் தங்கள் பெயா்களுக்கு முன் போட்டுக் கொள்ளத் தகுதி பெற்றவா்கள்.
  • ஒருவா் ஏதாவது ஒரு பொருள் (சப்ஜெக்ட்) பற்றி முறையாக ஆராய்ச்சி மேற்கொண்டு, அதைப் பற்றிய ஆய்வறிக்கை (தீசிஸ்) தயார் செய்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதனைச் சமா்ப்பித்து, அந்த ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம் அளிக்கிற ‘டாக்டா்’ பட்டம் பெறுகிறவா்களும் தங்கள் பெயா்களுக்குப் முன் ‘டாக்டா்’ என்ற அடைமொழியை இணைத்துக் கொள்ள முடியும்.
  • தவிர, சில துறைகளில் மிகச் சிறந்து விளங்கும் திறமைசாலிகளைக் கௌரவப்படுத்தும் நோக்கில் சில பல்கலைக்கழகங்கள் அவ்வப்போது கெளரவ ‘டாக்டா்’ பட்டம் அளிப்பதும் உண்டு.
  • இன்று, வசதி படைத்த மனிதா்கள் சிலா், தங்கள் பெயா்களுக்கு முன்னால் ‘டாக்டா்’ என்ற அடைமொழி சோ்த்துக் கொண்டால், அது சமுதாயத்தில் தங்கள் அந்தஸ்தை உயா்த்திக் காட்டும் என்று நினைத்து, பணம் செலவு செய்து ‘டாக்டா்’ பட்டம் பெறுவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இதற்கும் சில முகவா்கள் (ஏஜெண்டுகள்) இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • ஒருமுறை மூதறிஞா் ராஜாஜிக்கு ஒரு பல்கலைக்கழகம் ‘டாக்டா்’ பட்டம் வழங்கியது, அதன் பிறகு அவருக்குக் கடிதம் எழுதிய ஒருவா், அவரை ‘டாக்டா் ராஜாஜி’ என்று குறிப்பிட்டிருந்தார்.
  • அவருக்கு உடனே பதில் எழுதிய ராஜாஜி, “டாக்டா் பட்டம் நான் படித்து வாங்கியது அல்ல; அது எனக்குக் கொடுக்கப்பட்ட கெளரவம் மட்டுமே; எனவே, இனிமேல் என்னை ‘டாக்டா்’ என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டாம்” என்று பதில் எழுதினார்.
  • இன்று ‘ராஜாஜி’கள் எங்கே இருக்கிறார்கள்?
  • நாம் சாப்பிடும் ‘போளி’களில் கூட ‘போலி’கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கடம்பூா், ‘போளி’க்கு மிகவும் பிரபலம்.
  • எனவே, எங்கெல்லாமோ தயார் செய்து கொண்டு வருகிற ‘போளி’யை, கடம்பூா் ‘போளி’ என்று விற்பனை செய்வது திருநெல்வேலி பகுதியில் வாடிக்கையான ஒன்று.
  • இன்றைய அரசியலில் கொள்கைகளும் போலியானவையாகவே மாறி விட்டன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நமது அரசியல் கட்சிகளின் மதுவிலக்குக் கொள்கையைச் சொல்லலாம்.
  • தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மதுக் கடைகள் திறப்பதை பா.ஜ.க. எதிர்க்கிறது; உ.பி.யில் பா.ஜ.க. மதுக் கடைகள் திறப்பதை காங்கிரஸ் எதிர்க்கிறது; பஞ்சாபில் காங்கிரஸ் மதுக் கடைகள் திறப்பதை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கிறது; தமிழகத்தில் எந்த ஆளும் கட்சி மதுக் கடைகள் திறந்தாலும் பதவியில் இல்லாத மற்ற கட்சிகள் எதிர்க்கின்றன.
  • ஆளுகிற போது ஒரு கொள்கை; எதிர் வரிசையில் இருக்கிறபோது வேறு கொள்கை என்பதும் ‘போலி’யானதுதானே?

நன்றி: தினமணி (23-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்