- மகாராஷ்டிர மாநிலத்தில், தமது கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் அரசியல் காய் நகர்த்தலால் ஆட்சியை இழந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக நடத்திய சட்டப் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இத்தீர்ப்பை, இரு தரப்புமே தங்களுக்குச் சாதகமானதாக முன்வைப்பது விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. கூடவே, மக்கள் பிரதிநிதிகள், ஆளுநர் ஆகியோர் தார்மிக நெறியிலிருந்து வழுவுதல் கூடாது எனும் கருத்தும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட வேண்டியிருக்கிறது.
- ஜூன் 2022இல் நடந்த மகாராஷ்டிர மேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சிவசேனா எம்எல்ஏ-க்கள் சிலர் குறித்து, கட்சித் தலைமை கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் யுத்தம், உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவும், பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் புதிய ஆட்சி அமைக்கவும் வழிவகுத்தது.
- அதன் பின்னர், கட்சியின் பெயருக்கும் சின்னத்துக்கும் உரிமை கோரி இரு தரப்பும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசமைப்பு அமர்வு, இந்த விவகாரத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது; மறுபுறம், நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால், அவரை மீண்டும் முதல்வராக நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.
- உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக முடிவுக்கு வர ஆளுநர் வசம் வலுவான சான்றுகள் எதுவும் இருக்கவில்லை என்றும், உள்கட்சி விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டிருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் நீதிமன்றம், மறுபுறம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்திக் குழுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததில் தவறில்லை என்கிறது. முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய உத்தவ் தாக்கரேவுக்கு அந்த வாய்ப்பைத் தர மறுத்தது இதே உச்ச நீதிமன்றம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
- இதுபோன்ற தருணங்களில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படாமல், அரசமைப்புரீதியான பொறுப்புமிக்க பதவிக்கு மாண்பு சேர்க்கும் வகையில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்டிருந்த விரிசல் பெரும் பிளவாகி, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அவரே வித்திட்டுவிட்டார்.
- ஒருவேளை நிலைமை இன்னும் மோசமாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதற்கான சூழல் உருவாகியிருந்தால், ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மகாராஷ்டிர மக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள். இந்தத் தீர்ப்பு தொடர்பாகப் பேசியிருக்கும் உத்தவ் தாக்கரேகூட, தன்னைப் போலவே ஏக்நாத் ஷிண்டே அரசும் பதவி விலக வேண்டும்; அனைவரும் புதிய தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு கட்சியின் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ-க்கள், கலகம் செய்து ஆட்சி அதிகாரத்துக்கு வருவது என்பது தார்மிக நெறியற்றது. இதுபோன்ற தருணங்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இப்படியான வழக்குகளில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதை நீதிமன்றங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: தி இந்து (18 – 05 – 2023)