TNPSC Thervupettagam

‘மிஷன் மெளசம்’ வானிலைத் திட்டம்

September 18 , 2024 118 days 152 0

‘மிஷன் மெளசம்’ வானிலைத் திட்டம்

  • இந்தியாவில் நிலவும் காலநிலை தொடர்பான சிக்கலான விஷயங்​களைப் பகுப்​பாய்வு செய்ய​வும், கணிக்க முடியாமல் போகும் வானிலை மாற்றங்​களைச் சமாளிக்​க​வும், அதிதீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே அறியவும் புவி அறிவியல் அமைச்​சகத்​தின்கீழ் ‘மிஷன் மெளசம்’ (Mission Mausam) என்கிற திட்டம் செயல்​படுத்​தப்பட உள்ளது. 2024 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று இத்திட்​டத்​துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கி​யுள்ளது.

​காலத்தின் கட்டாயம்:

  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கை​யின்படி, 2022இல் மட்டும் இந்தியாவில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு​களில் 35% இயற்கைப் பேரிடர்​களால் ஏற்பட்டவை என்பது தெரிய​வந்தது. இதில் வெள்ளம், நிலச்​சரிவு​களால் உயிரிழந்​தவர்​களைவிட மின்னல் தாக்கியதால் உயிரிழந்​தவர்​களின் எண்ணிக்கையே அதிகம் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது. காலநிலை மாற்றத்​தினால் ஏற்படும் பாதிப்பு​களைக் குறைக்​க​வும், பருவமழை முன்னறி​விப்பை மேம்படுத்​த​வும், உயிரிழப்பு​களைக் குறைக்​கவும் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்​படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்து​கிறது.
  • ஏற்கெனவே, 2012ஆம் ஆண்டு ‘பருவ​மழைத் திட்டம்’ (Monsoon Mission) என்கிற திட்டத்தை அறிமுகப்​படுத்​தி​யிருந்த இந்திய வானிலை ஆய்வு மையம், பருவமழை முன்னறி​விப்பைக் கணிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. எனினும், வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி இந்தியாவைத் தாக்கிய​போது, அவற்றைச் சரியாகக் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடிய​வில்லை.
  • எண்ணியல் அடிப்​படையிலான வானிலை முன்கணிப்பு மாதிரியால் (NWP) இப்பணியைத் திறம்படச் செய்ய முடியாமல்​போனது ஒரு முக்கியக் காரணம். இதனால், இந்தியாவின் கைவசம் இருக்​கக்​கூடிய வானிலை முன்னறி​விப்புக் கருவிகளை, ‘சென்​சார்’களை அதிநவீனத் தொழில்​நுட்​பத்தைக் கொண்டு மேம்படுத்துவது அவசிய​மாகிறது. அதற்காகத்தான் தற்போதைய திட்டம் கொண்டு​வரப்​பட்​டிருக்​கிறது.

திட்டம் என்ன?

  • கடந்த 10 ஆண்டு​களில் வெப்ப அலைகள், கனமழை, நிலச்​சரிவு, நீரிடி (cloudburst) போன்ற அனைத்துமே இந்தியாவின் பல்வேறு பகுதி​களைப் பாதிக்கத் தொடங்கி​விட்டன. தற்போது அறிமுகப்​படுத்​தப்​பட்​டிருக்கும் ‘மிஷன் மெளசம்’ திட்டத்​தில், இந்தியாவில் வானிலை முன்னறி​விப்பு சார்ந்த பணிகளில் முக்கியப் பங்காற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), நடுத்தர நிலை வானிலை முன்னறி​விப்புத் தேசிய மையம் (NCMRWF), இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM) ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பணியாற்ற உள்ளன.
  • அடுத்த ஐந்து ஆண்டு​களில் இத்திட்​டத்தை இரண்டு கட்டங்​களாகச் செயல்​படுத்தத் திட்ட​மிடப்​பட்​டு உள்ளது. முதல் கட்டமாக, தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் 70 டாப்ளர் ரேடார்கள், காற்றின் அளவைக் கணிக்கும் 10 காற்றுத் தகவல்​சேகரிப்புக் கருவிகள், 10 கதிர்​வீச்​சு​மானிகளை நிறுவத் திட்ட​மிடப்​பட்​டுள்ளது.
  • மற்ற நாடுகளோடு ஒப்பிடும்​போது, சீனாவில் 217 டாப்ளர் ரேடார்​களும் 128 காற்று தகவல்​சேகரிப்புக் கருவி​களும், அமெரிக்​காவில் 160 ரேடார்​களும், 100 காற்றுத் தகவல்​சேகரிப்புக் கருவி​களும் இயங்கிவரு​கின்றன. இரண்டாம் கட்டமாக, வானிலை மாற்றங்​களைப் பகுப்​பாய்வு செய்து தகவல் திரட்டு​வதற்காக மேம்படுத்​தப்பட்ட தொழில்​நுட்பம் பொருந்திய செயற்​கைக்​கோள்​களும் விமானங்​களும் பயன்படுத்​தப்பட உள்ளன.

பயன்கள்:

  • அதிநவீன வானிலை முன்கணிப்புத் தொழில்​நுட்​பத்தால் பருவமழை, காற்று மாசு, தீவிர வானிலை நிகழ்வுகள், புயல் ஆகியவற்றைத் துல்லிய​மாகக் கணிக்க முடியும் என்பதோடு, நிகழ்​நேரத் தகவல்​களைப் பெறவும் முடியும். வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புத் துறை, விமானப் போக்கு​வரத்து, சுற்றுலாத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்​களுக்குத் துல்லியமான வானிலை முன்கணிப்பு பயனுள்ளதாக அமையும்.
  • புணே நகரில் உள்ள இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையத்தில் மேகத்தின் தன்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் ஒன்றும் அமைக்​கப்பட உள்ளது. சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் சோதனைக்கு உள்படுத்​தப்​பட்​டுள்ள மேக விதைப்பு (Cloud seeding) முறையை இந்தியா​விலும் அறிமுகப்​படுத்த முயற்சி மேற்கொள்​ளப்​பட்டு​வரு​கிறது.
  • ஏற்கெனவே தமிழ்​நாடு, கர்நாடகம், தெலங்கானா மாநிலங்​களில் மேக விதைப்பு முறை சோதனை செய்யப்​பட்​டாலும், அது அடுத்த கட்டத்தை எட்டவில்லை. பல நாடுகளிலும் இந்த மேக விதைப்பு முறையின் செயல்​திறன் முழுமை அடையாமலும் சோதனைக் கட்டத்தைத் தாண்டா​மலும் இருப்​பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • டெல்லியைப் போன்று காற்று மாசு அதிகமாகக் காணப்​படும் நகரங்​களில் மேக விதைப்பு முறையில் வேதிப் பொருள்களை மேகங்​களில் விதைத்து, காற்றில் அழுத்​தத்தை அதிகரித்து செயற்​கையாக மழையைப் பெய்ய வைத்து, காற்று மாசைக் குறைப்​ப​தற்கான வழிகளையும் முயன்​று​பார்க்கத் திட்ட​மிடப்​பட்​டுள்ளது. கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படாமல் தடுக்க செயற்கை முறையில் மழையைத் தடுக்கும் முறையையும் சோதனை செய்ய இருப்​ப​தாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.
  • பல ஆண்டுகள் எடுக்​கக்​கூடிய ‘மிஷன் மெளசம்’ திட்டத்தின் சோதனைகள் வெற்றியடை​யும்​பட்​சத்​தில், இந்தியாவில் வானிலை முன்னறி​விப்பின் துல்லியம் 5இல் இருந்து 10 சதவீதமாக முன்னேற்றம் அடையலாம். பெருநகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புற அளவிலும், 10 முதல் 15 நாள்களுக்கான வானிலை மாற்றங்களை நிகழ்நேர அடிப்​படையில் தெரிந்​து​கொள்​ளலாம்.
  • முக்கியமாக, இயற்கைப் பேரிடரால் ஏற்படக்​கூடிய உயிரிழப்​பை​யும், பொருள் இழப்பையும் ஓரளவு தடுக்​கலாம். வானிலை, காலநிலை மாற்றங்கள் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவது சவாலான காரியம் என்பதால், தீவிரமான ஆராய்ச்​சியும் முயற்​சியும் தேவைப்​படும் ஒரு திட்ட​மாகவே இது இருக்கும் எனத் தெரிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்