- பள்ளிக்கூடங்களுக்கு ‘ஸ்மார்ட்போன்’ கொண்டுவரக் கூடாது என்ற தடையால், பிரிட்டன் நாட்டின் சேனல் ஐலண்ட் பள்ளிக்கூட மாணவர்களின் உடல் – மனநலமும், படிப்பும் மேம்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட நேரத்தில் படிப்பில் கவனம் சிதறக் கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த முடிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது; வீடுகளிலும் இந்தத் தடை நீடிப்பது நல்லது என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர்.
- ‘சேனல் ஐலண்ட்’ என்ற தீவின் குவார்ன்சி, ஜெர்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களுக்கு அடிமையாகி அதிலேயே விளையாடுவது, பொழுதுபோக்குகளில் மனம் தோய்வது என்று மூழ்கிவிடுவதால் படிப்பு மட்டுமல்லாமல் சாப்பாடு- தூக்கம் ஆகியவற்றையும் இழந்துவிடுவதைப் பள்ளிக்கூட நிர்வாகிகள் பார்த்து மிகவும் கவலைப்பட்டார்கள். செல்போன்களை மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவருவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஓரிரு ஆண்டுகளாக, பல தடைகளைப் படிப்படியாகக் கொண்டுவந்தார்கள். அவற்றுக்கு நல்ல பலன் கிடைப்பது தெரியத் தொடங்கியதையும் தடைகளின் வகைகளையும் நேரத்தையும் கூட்டினர். இப்போது ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் அதிகமாகவே ஏற்பட்டுவருகின்றன.
- ஆனால், இதை நிரந்தரமாக அமல்படுத்த அரசியல் தலைவர்கள் யாரும் முன்முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் இதில் அக்கறை எடுத்து சட்டம் இயற்றினால்தான் இத்தகைய தடைகளைப் பள்ளிக்கூட நிர்வாகங்களால் சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும். அவர்களில் சிலர், ‘தடை ஏன் - கட்டுப்படுத்தினால் போதாதா?’ என்றே கேட்கின்றனர்.
- ‘பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவரவே கூடாது என்று தடை விதிப்பது அவசியமில்லை, வகுப்பு நேரங்களில் மாணவர்கள் அதைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தினால் போதும்’ என்று குழந்தைகள் நலனுக்கான ஜெர்சி ஆணையரும் கருதுகிறார்.
யுனேஸ்கோ வேண்டுகோள்
- செல்போன்களால் மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் சிதறுவதையும் பொழுதுபோக்குகளில் நேரம் போவது தெரியாமல் ஈடுபட்டு அடிமையாவதையும் கண்டு அஞ்சியே, ஸ்மார்ட்போன்கள் என்று அழைக்கப்படும் அதிநவீனரக செல்போன்களை, குழந்தைகள் பயன்படுத்த முடியாதபடி தடைசெய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் முக்கிய அங்கமான ‘யுனெஸ்கோ’ அழைப்பு விடுத்தது. அதை எந்த நாடும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
- பிரிட்டனில் 11 வயதுக்குள் 90% குழந்தைகளுக்குப் பெற்றோர்களாலேயே ஸ்மார்ட்போன்கள் வாங்கித்தரப்படுகின்றன. அதில் குழந்தைகளின் மனங்களில் அச்சமூட்டும், விகாரப்படுத்தும் வகையில் எதுவும் இடம்பெறாதபடிக்குச் சமூக ஊடக நிறுவனங்களும், குழந்தைகளின் நலனில் அக்கறை உள்ளவர்களும் தன்னார்வலர்களும் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும் என்று தகவல்தொடர்புத் துறை ஒழுங்காற்றுநர்கள் கூறுகின்றனர்.
- 16 வயதுக்குள்பட்ட சிறார்கள், பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தவே கூடாது என்று தடை விதித்துவிட வேண்டும் என்று குவார்ன்சி மகளிர் கல்லூரியின் முதல்வர் திருமதி டேனியல் ஹர்ஃபோர்ட்-ஃபாக்ஸ் கோருகிறார்.
- “ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக ஊடக நிறுவனங்கள் வெவ்வேறுவிதமான அல்காரிதம்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறார்கள் ஸ்மார்ட்போன் நிகழ்ச்சிகளுக்கு அடிமைகளாகிவிடுகின்றனர். இது அவர்களுடைய படிப்பை மட்டுமல்ல உடல் – மனநலனையும் சேர்த்தே கெடுக்கிறது. இப்போது பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட்போன்களுக்குத் தடை என்பதால், குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது குழந்தைகளை அதனிடமிருந்து காப்பாற்ற முடிகிறதே என்ற நிம்மதி பிறக்கிறது.
- எங்கள் கல்லூரியிலும் நாங்கள் இந்தத் தடையை அமல்செய்திருப்பதால் மாணவர்களிடையே அமைதியான மனநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் பேசுவதும் பழகுவதும் அதிகரித்துள்ளது. பாடங்களில் விளையாட்டுகளில் கலை நிகழ்ச்சிகளில் கைவினைத் தொழில்களில் அதிக கவனமுடனும் ஈடுபாட்டுடனும் அவர்களால் செயல்பட முடிகிறது” என்கிறார் திருமதி டேனியல்.
- “குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல், அவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ளவும் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கித் தருகிறார்கள் என்பதும் உண்மையே; அந்தத் தேவைக்காகவே நாங்கள் கல்லூரியில் தனித் தகவல்தொடர்பு வசதியைச் செய்து தந்திருக்கிறோம். பெற்றோரும் பிள்ளைகளைத் தொடர்புகொள்ளலாம், பிள்ளைகளும் பெற்றோருடன் தொடர்புகொள்ளலாம். எனவே, அவசியமான தகவல் தொடர்புக்கு தடை இல்லை” என்கிறார் திருமதி டேனியல்.
- சேனல் தீவின் நான்கு உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக குவார்சினி கல்லூரியின் தலைமை முதல்வர் லிஸ் காஃபே தெரிவிக்கிறார்.
- ஜெர்சி கல்வித் துறை துணை அமைச்சர் ராப் வார்ட்: குழந்தைகளின் பெற்றோர்களும் காப்பாளர்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக பள்ளிக்கூடங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பது நல்லது. பள்ளிக்கூடத்தைவிட்டு குழந்தைகள் வேறெங்காவது சென்றாலும் அவர்களுடன் எப்படித் தொடர்பில் இருப்பது என்பது குறித்து மிகுந்த கவனத்துடன் சிந்திக்க வேண்டும். இப்பகுதியில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில், பள்ளி நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை உள்ளது. எனவே, பெற்றோரை மாணவர்கள் தொடர்புகொள்வதற்தும் போன்களை மாணவர்கள் முறையான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்கும் தகுந்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.
காலம் கடந்துவிட்டது
- ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறார்களைத் தடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது என்கிறார் ஜெர்சி குழந்தைகள் நல ஆணையர் டாக்டர் கார்மேல் கோரிகான். “குழந்தைகள் தங்களுக்கு எது நல்லது என்று அறிந்துகொள்ளவும் பாடங்களையும் புதிய தகவல்களையும் கற்றுக்கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் காலம் இது. ஸ்மார்ட்போனைத் தவிர வேறெதுவும் தெரியாது என்ற தலைமுறையுடன் இப்போது வாழ்கிறோம். பாதுகாப்பான பயன்பாட்டை அதிகப்படுத்தவும் குழந்தைகளைக் கெடுக்கும் விஷயங்கள் மிகக் குறைவாக மட்டும் இடம்பெறவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையையும் - தடை நடவடிக்கையையும் சமப்படுத்தியாக வேண்டும்” என்கிறார் கார்மேல் கோரிகான்.
நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2024)