ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்ற மரியாம் மீர்ச்சாகானி காலமானார்
July 16 , 2017 2720 days 1253 0
ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற முதல் பெண்மணியான மரியாம் மீர்ச்சாகானி அமெரிக்காவில் காலமானார்.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியரான மரியாம் புற்று நோயால் காலமானார்.
கணிதத் துறையில் நோபல் பரிசுக்கு இணையான பரிசாக கருதப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை சர்வதேச கணித ஒன்றியம் (International Mathematical Union - IMU) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு முதல் நான்கு கணிதவியல் நிபுணர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் (International Congress of Mathematicians) மீர்ச்சாகானி உட்பட நான்கு பேருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற முதல் ஈரான் நாட்டவர் மற்றும் முதல் பெண்மணி என்ற பெருமையை முனைவர் மரியாம் மீர்ச்சாகானி பெற்றார்.
இதற்கு முன் இப்பதக்கத்தை வென்ற 52 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபீல்ட்ஸ் பரிசு மற்றும் ஏபெல் பரிசு (Abel Prize) ஆகிய இரண்டும் கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும்.
ஃபீல்ட்ஸ் பதக்கம் கனடியக் கணிதவியலாளரான ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924இல் முன்மொழியப்பட்டது. இந்தப் பதக்கத்துடன் 1500 கனடா டாலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே ஃபீல்ட்ஸ் பதக்கம் அளிக்கப்படுவதும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுவதும் இதன் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.