அடல் புத்தாக்கத் திட்டத்தின் (Atal Innovation Mission-AIM) கீழ் நிதி ஆயோக் அமைப்பானது அடல் புதிய இந்தியா சவால் என்ற திட்டத்தை (Atal New India Challenge) துவங்கியுள்ளது. மக்களுக்கு தொடர்புடையதாய் உள்ள பொருத்தமான தொழில் நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கி அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்தொடக்கத்திற்காக அடல் புத்தாக்கத் திட்ட அமைப்பானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளது.
1956 மற்றும் 2013-ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் (Companies Act) கீழ் பதிவு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தர தொழிற்துறை நிறுவனங்கள் (MSMEs), ஸ்டார்ட்-அப்கள், தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள், கல்வியியல் நிறுவனங்கள் மற்றும் கல்வியலாளர்கள் என அனைவருக்கும் இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்படும்.