முப்பதாண்டுகள் பழமையான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தி நிறுவல்கள் (Nuclear Installation) மற்றும் வசதிகளின் (Facilities) பட்டியலை புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள தத்தமது தூதரகங்களின் வழியாக ஒரே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரிமாறிக் கொண்டுள்ளன.
இது இவ்விரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்ச்சியான 27-வது பரிமாற்றமாகும்.
இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி நிறுவல்களுக்கு எதிரான தாக்குதல்களின் தடுப்பு மீதான ஒப்பந்தத்தின் (Prohibition of Attacks against Nuclear installation) கீழ், இப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1988-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27ல் செயல்பாட்டுக்கு வந்தது.
ஒவ்வொரு நாட்காட்டி ஆண்டுகளின் (Calender Year) ஜனவரி முதல் தேதியில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் பட்டியலிடப்பட வேண்டிய அணுசக்தி நிறுவல்கள் மற்றும் வசதிகளை இரு நாடுகளும் குறிப்பிட்டு பரஸ்பரம் பரிமாறித் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அணுசக்தி உலைகள், அணு எரிபொருள் தயாரிப்பு மையங்கள் (Fuel Fabrication), யுரேனியம் செறிவூட்டு மையங்கள் (Uranium Enrichment), ஐசோடோப்புகளின் பிரிப்பு மையங்கள், அணுசக்தி மறுசெயல்முறை மையங்கள் (Reprocessing facilities), பிற புதிய அணுசக்தி மையங்கள் மற்றும் கதிர்வீச்சுக்குட்படாத அணுசக்தி எரிபொருட்கள் (irradiated nuclear fuel) ஆகியவை இந்த அணுசக்தி நிறுவல் மற்றும் வசதிகளின் வார்த்தைக்குள் உள்ளடங்கும்.