இந்திய அரசானது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, 2017 என்ற கொள்கையைத் திருத்தியுள்ளது.
இந்தப் புதியத் திருத்தமானது, சில முதலீடுகள் நேரடி வழியின் கீழ் அல்லாமல் அரசு அனுமதி பெறும் வழியின் மூலம் மட்டுமே வர வேண்டும் என்று கூறுகின்றது.
தற்போதைய விதிமுறையின் கீழ், இந்தியாவைச் சாராத நிறுவனங்கள் அரசாங்க வழியின் மூலம் மட்டுமே இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றன.
இது இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து அண்டை நாடுகளுக்கும் பொருந்தும்.
மேலும், முதலீட்டின் மீதான உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றும் போது, பயனாளர் நிறுவனம் இந்திய அரசிடமிருந்து அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
இந்த நடவடிக்கையானது இந்திய நிறுவனங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியானது திறந்த வெளிச் சந்தைக் கொள்முதலின் மூலம் எச்டிஎப்சி வங்கியில் தனது பங்கை 0.8%லிருந்து 1.01% என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது என்று வீட்டுவசதி வளர்ச்சி நிதியியல் கழகம் (HDFC - Housing Development Finance Corporation Ltd) அண்மையில் அறிவித்துள்ளது.