இடம்பெயர்தல் மீதான ஐ.நாவின் உலக உடன்படிக்கையில் இருந்து (UN’s Global Compact on Migration) அமெரிக்கா வெளியேறியுள்ளது.
கடந்த ஆண்டு ஐநா பொது அவையினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் மற்றும் குடியேற்றத்துக்கான நியூயார்க் பிரகடனம் எனும் இந்த உடன்படிக்கை ஒரு சட்ட பிணைப்பற்ற (Non binding) உடன்படிக்கையாகும். அன்றிலிருந்து அமெரிக்கா இதன் உறுப்பினராக இருந்து வருகின்றது.
இந்த அகதிகள் மற்றும் குடியேற்றத்திற்கான உடன்படிக்கையிலிருந்து வெளியேற்றம் உட்பட மொத்தம் நான்கு சர்வதேச உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா இந்த ஆண்டு வெளியேறி உள்ளது.
அகதிகள் மற்றும் இடம்பெயர்பவர்களின் உரிமைகளை காப்பதையும் அவர்கள் மறுகுடியமர்வுக்கு (resettle) உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு, குடியேறுதலுக்கான உலக உடன்படிக்கையின் மீது பேச்சுவார்த்தை நடத்த இப்பிரகடனம் அழைப்பு விடுக்கின்றது.
முன்னால் அதிபர் பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஐநா உடன்படிக்கை ஆனது அமெரிக்காவின் குடியேற்ற அல்லது இடம்பெயர்வு, அகதிகள் கொள்கைகளுடனும், டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கோட்பாடுகளுடனும் முரண்பட்ட நிலையில் பல்வேறு எண்ணிக்கையிலான கூறுகளைக் கொண்டுள்ளது என காரணம் காட்டப்பட்டு இந்த வெளியேற்றம் அமெரிக்காவால் நியாயப்படுத்தப் பட்டுள்ளது.