தமிழ்நாடு முதல்வர் ஜனவரி 21-ம் தேதியன்று மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களாக உள்ள அரசு இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் மாண்டிச்சோரி கல்வி வழியில் அமைந்திருக்கும் மழலையர் கல்வி வகுப்புகளை குழந்தைகள் அணுகிடுவதற்கு ஏதுவாக ஒரு சோதனைத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இது 2381 அங்கன் வாடிகளில் 52000 குழந்தைகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த வகுப்புகள் அனைத்து 32 மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும்.
இந்த பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் மேலாண்மை செய்யப்படும். மேலும் இப்பள்ளிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
இதே நோக்கத்திற்காக அதிகப்படியாக உள்ள இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவர்.
குழந்தைகளுக்கு கல்வியளிக்க உள்ள ஆசிரியர்கள் சமக்ரா சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்படுவர்.
நான்கு பள்ளிச் சீருடைகள், ஒரு ஜோடி காலணி, எழுதுபொருள்கள் மற்றும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் ஆகியன மாநில அரசால் வழங்கப்படும்.
இந்த திட்டம் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவது மற்றும் பேசுவது, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நாடுவதற்கு உதவிடும் என்று அரசு தளராத நம்பிக்கை கொண்டிருக்கின்றது.
இத்திட்டத்திற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.
இது மூன்று வருடங்களுக்கான ஒரு சோதனைத் திட்டமாகும்.