டெல்லி சட்டப் பேரவையைச் சேர்ந்த 20 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தவிர்த்து பிற ஆதாயம் தரும் பதவிகளை (Office of Profit) வகித்து வருவதன் காரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை ஏற்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இதனால் டெல்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 66லிருந்து 46ஆக குறைந்துள்ளது.
மேலும், செப்டம்பர் 2016ல் டெல்லி உயர் நீதிமன்றமும் பாராளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட இந்த 20 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை மறுத்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாயம் தரும் பதவி
மாநில சட்ட மன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அல்லாமல் பிற வகையில் மற்ற அரசு அலுவலகங்களில் பங்கெடுத்து அதிலிருந்து ஆதாயம் அடைந்தால் அந்த பதவியானது “ஆதாயம் தரும் பதவி “ (Office of Profit) எனப்படும்.
நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தால் குறிப்பிட்ட அலுவலகங்களில் சட்ட அவை உறுப்பினர்கள் பங்கெடுத்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்படும் அலுவலகங்களைத் தவிர, மற்ற மத்திய அல்லது மாநில-அரசின் கீழான ஆதாயம் பெறக்கூடிய பதவிகளில் பங்கெடுத்தால் சட்ட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 102(ஏ) மற்றும் பிரிவு 191(1)(ஏ) ஆகியவை இரட்டைப் பதவிகள் குறித்து தெரிவிக்கின்றன. மக்கள் பிரதிநிதி ஒருவர் இரட்டைப் பதவி வகித்து 2 ஆதாயம் பெற்றால் அவர்கள் பதவியிழப்பர் என்பதுதான் இப்பிரிவுகளின் சாராம்சம். இதில் ஆதாயம் பெறும் பதவி என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. எந்தெந்த பதவிகள் இந்த பிரிவின் கீழ் வரும் என்ற பட்டியலும் இல்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பின்னர் 1959-ம் ஆண்டு திருத்தப்பட்டதில் தனிப்பட்டியல் உருவாக்கப்பட்டு [Parliament (Prevention of Disqualification) Act, 1959], அந்த பட்டியலில் வரும் பதவிகள் இரட்டைப் பதவி என்ற வகைப்பாட்டில் வராது என்று விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற செயலர் பதவி விலக்களிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.