உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum- WEF) வெளியிட்டுள்ள ஆற்றல் மாற்றக் குறியீட்டில் (Energy Transition Index-ETI) 114 நாடுகளுள் இந்தியா 78 வது இடத்தைப் பிடித்துள்ளது.
திறன் வாய்ந்த ஆற்றல் மாற்றத்தை வளர்த்தல் (Fostering Effective Energy Transition) என்ற அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆற்றல் மாற்றக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு நன்றாக நாடுகளால் ஆற்றல் பாதுகாப்பை சமநிலைப்படுத்த இயலும் என்பதனை அடிப்படையாகக் கொண்டும், எந்த அளவுக்கு சுற்றுச் சூழல் நீடித்தத் தன்மைக்கு நாடுகள் அணுகுதலைக் கொண்டுள்ளன என்பதனை அடிப்படையாகக் கொண்டும் உலக நாடுகள் இக்குறியீட்டில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆற்றல் மாற்றக் குறியீட்டில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது. சுவீடனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
முதல் 10 இடங்களில் 4 முதல் 10 வரையிலான தரவரிசையில் முறையே பின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவின் சக வளரும் பொருளாதார நாடுகளுள் (India's emerging market peers) பிரேஸில் 38-வது இடத்திலும், சீனா 76-வது இடத்திலும் உள்ளன.
இக்குறியீட்டில் இரஷ்யா 70-வது இடத்தில் உள்ளது.
இந்தியா, 2022-ல் 175 ஜிகாவாட் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இலக்கினைக் கொண்ட மிகப்பெரிய, அரசினால் நடைமுறைப் படுத்தப்படும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தித் திட்டமான தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தை (National Solar Mission -NSM) அமல்படுத்தி வருகின்றது.
தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தின் கீழ் 175 ஜிகாவாட் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலில் 100 ஜிகாவாட் மின் ஆற்றலானது சூரிய மின் (solar) உற்பத்தி மூலமும், 60 ஜிகாவாட் மின் ஆற்றலானது காற்றாலை மின் உற்பத்தி மூலமும், 10 ஜிகாவாட் ஆற்றலானது உயிரி ஆற்றல் மூலமும், 5 ஜிகாவாட் ஆற்றலானது சிறிய நீர்மின் திட்டங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படும்.