இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உதவுவதற்காக பசிபிக் தீவு நாடான துவாலுவிற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பினை எதிர்கொள்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்த உடன்படிக்கையானது பருவநிலை மாற்றத்திலிருந்து அந்தத் தீவைப் பாதுகாப்பதோடு அங்கு குடியேற்றத்தையும் அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவில் துவாலு நாட்டு குடிமக்கள் வேலை செய்யவும், கல்வி பயிலவும் மற்றும் வாழ்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சிறப்பு நுழைவு இசைவு சீட்டு விதிமுறைகளை ஆஸ்திரேலியா செயல்படுத்த உள்ளது.
இது அகதிகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு அல்ல, மாறாக ஒவ்வோர் ஆண்டும் 280 துவாலு நாட்டு குடிமக்கள் (சுமார் 11,200 மக்கள் தொகையில்) ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடி பெயர அனுமதிக்கும் நுழைவு இசைவுச் சீட்டு ஆகும்.