இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படும், இரண்டாண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடு ஆன 18வது இந்தியக் காடுகளின் நிலை குறித்த ஒரு அறிக்கையானது (ISFR) ஓராண்டிற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, 24.62 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் மொத்தக் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 25.17 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
முதன்முறையாக வேளாண் காடு வளர்ப்பின் கீழ் வளர்க்கப்படும் மரங்களும் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு ISFR அறிக்கையில் பதிவான காடுகளின் பரப்பளவு மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17 சதவீதமாக இருந்தது.
மொத்தக் காடுகளின் பரப்பளவு 7,15,342.61 சதுர கிலோமீட்டர் ஆகும் என்ற நிலையில் இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதமாகும்.
இந்த இரண்டையும் கணக்கில் கொண்டு கூறுகையில், மொத்தக் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 8,27,356.95 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
நாட்டின் புவியியல் பரப்பில் 3.41 சதவீதம் மரங்கள் உள்ளன.
காடு மற்றும் மரங்களின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்புப் பதிவாகியுள்ள முதல் நான்கு மாநிலங்கள் சத்தீஸ்கர் (684 ச. கிமீ), உத்தரப் பிரதேசம் (559 ச. கிமீ), ஒடிசா (559 ச. கிமீ) மற்றும் இராஜஸ்தான் (394 ச. கிமீ) ஆகியவையாகும்.
காடுகளின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ள முதல் மூன்று மாநிலங்கள் மிசோரம் (242 ச. கிமீ), குஜராத் (180 ச. கிமீ) மற்றும் ஒடிசா (152 ச. கிமீ) ஆகியவையாகும்.
பரப்பளவு வாரியாக மிகப்பெரிய காடு மற்றும் மரங்களின் பரவல் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 ச. கிமீ), அருணாச்சலப் பிரதேசம் (67,083 ச. கிமீ) மற்றும் மகாராஷ்டிரா (65,383 ச. கிமீ) ஆகியவையாகும்.
மொத்தப் புவியியல் பரப்பளவில் காடுகளின் பரவல் சதவீதத்தின் அடிப்படையில், லட்சத்தீவு (91.33 சதவீதம்) அதிகப் பரவலைக் கொண்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவு (81.62 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியாவின் மொத்த சதுப்புநிலப் பரப்பு 4,992 சதுர கிலோ மீட்டர் ஆகும்.