மத்திய நிதியமைச்சர் அவர்கள், இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
இது நிதி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டது.
இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் 10 ஆண்டு காலப் பொருளாதாரச் செயல்திறனைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் 10 ஆண்டு கால ஆட்சியுடன் ஒப்பிடுகிறது.
2014 ஆம் ஆண்டில் NDA அரசாங்கம் பதவியேற்ற போது இருந்த ஆளுகைத் திறன், பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் தன்மை மற்றும் பரவலை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இது தெரிவிக்க முயல்கிறது.
2014 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தின் நலத்தினை மீட்டெடுக்க (NDA) அரசாங்கம் எடுத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி இது தெரிவிக்கிறது.
இது மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
முதல் பகுதியானது, 10 ஆண்டுகால UPA ஆட்சியின் போதான பேரியப் பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்கிறது.
இரண்டாவது அறிக்கையானது UPA அரசாங்கத்தின் பல்வேறு ஊழல் மோசடிகளின் தற்போதைய நிலை குறித்தத் தகவல்களை வழங்குகிறது.
மூன்றாவது பகுதியானது, NDA அரசாங்கம் எப்படி பொருளாதாரத்தை மாற்றி அமைத்தது என்பதைக் காட்டுகிறது.
2004 ஆம் நிதியாண்டில் 31% ஆக இருந்த மொத்தச் செலவினங்களின் சதவீதமாக (வட்டிக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து) குறிப்பிடப்படும் மூலதனச் செலவினமானது 2014 ஆம் நிதியாண்டில் 16% ஆக பாதியாகக் குறைந்தது (இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 28% ஆக உள்ளது).
அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2004 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 17 மாதங்கள் வரையிலான இறக்குமதிகளுக்கு நிதியளிக்கத் தேவையானதாக இருந்த நிலையில், இது 2013 ஆம் ஆண்டில் 6 மாதங்களுக்கு மேலான காலம் வரையில் நிதி அளிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 10.6 மாத இறக்குமதிக்கு நிதியளிப்பதற்குப் போதுமானதாக இருந்தது.