இந்தியாவின் முதல் கலைமான் (பிளாக்பக்) பாதுகாப்பு சரணாலயம்
November 4 , 2017 2554 days 1417 0
உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் பகுதியில் உள்ள யமுனை நதிக்குட்பட்ட மேஜா வனப் பிரிவில் கலைமான் (பிளாக்பக்) இன மான்களுக்கான பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுமார் 350 கலைமான்கள் இப்பகுதியில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டின் ஒரு சில சரணாலயங்கள் மற்றும் தேசிய வனவிலங்கு பூங்காக்களில் மட்டுமே இம்மான்கள் வசிக்கின்றன.
அவற்றுள் சில,
குஜராத்திலுள்ள வேலவதார் வன விலங்கு சரணாலயம்.
கர்நாடகாவிலுள்ள ராணிபென்னுர் சரணாலயம்.
1972-ஆம் ஆண்டின் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 36 A (1) மற்றும் (2)-ன் கீழ் உத்திரப்பிரதேச அரசு அமைக்கவிருக்கும் இந்த பாதுகாப்பு சரணாலயமானது கலைமான்களுக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்படும் நாட்டின் முதல் கலைமான் பாதுகாப்பு சரணாலயமாகும்.
கலைமான்கள்
இந்திய கலைமான்கள் ஓர் மறிமான்களாகும். தற்போது இவை மறிமான்கள் பேரினத்தைத் சேர்ந்த ஒரே உயிர்வாழும் மான் இனமாகும்.
சிறுத்தைகளுக்கு அடுத்து உலகின் வேகமான விலங்கினமாக கலைமான்கள் கருதப்படுகிறது.
இவை ஒன்றிலிருந்து நான்கு சுழற் திருகுகளை கொண்ட வளையக் கொம்புகளை உடையவை.
பொதுவாகப் பெண் கலைமான்களுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை ஒன்றின் (Schedule 7) கீழ் இந்தக் கலைமான்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இவற்றின் மீதான வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN-International Union For Conservation of Nature) சிவப்புத் தரவு புத்தகத்தின் (Red Data Book) குறைந்த கவனமுடைய (Least Concerned) வகைப்பாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் (Bishnoi) சமூகத்தினர், கலைமான்கள் மற்றும் சின்காரா இன மான்களை பாதுகாக்கும் தங்களுடைய நடவடிக்கைகளுக்காக உலகப் பெயர் பெற்றவர்கள்.