இந்தியாவின் முதல் தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம்
December 22 , 2017 2532 days 851 0
நாட்டின் பெரும் மனித வளத்தின் திறனை வளர்க்கவும், திறமுடைமையை கட்டமைக்கவும் நாட்டின் முதல் தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்க மத்திய இரயில்வே அமைச்சகத்தின் மாற்றுருவாக்கத் திட்டத்திற்கு (Transformative Initiative) மத்திய கேபினேட் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழக மானிய நல்கு ஆணையத்தின் (பல்கலைக்கழகங்களாக கருதப் பெறும் நிறுவனங்களின்) ஒழுங்குமுறை விதிகள் 2016-ன் படி (UGC – Institutions deemed to be Universities - Regulations 2016) புது ஆரம்ப நிலை வகைப்பாட்டின் (De nova Category) கீழ் பல்கலைக்கழகமாக கருதத்தக்க கல்வி நிறுவனமாக இந்த தேசிய இரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட உள்ளது.
புதிதாகத் தொடங்கிட முன் மொழியப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக நிறுவனமாக செயல்பட கம்பெனிகள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் கீழ் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிர்வாக நிறுவனமானது (Managing Company) இப்பல்கலைக்கழகத்திற்கு நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகளை செய்யும். மேலும் இது பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை நியமிக்கும்.
பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை உண்டாக்குதல், தொழிற்முனைவுத் தன்மையை வளர்த்தல், தொழிற்நுட்ப வசதிகளை ஒருமுகப்படுத்தி திறன் வளர்த்தல் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் “ஸ்டார்ட் அப் இந்தியா“ மற்றும் “திறன் இந்தியா“ போன்ற திட்டங்களுக்கு இப்பல்கலைக்கழகம் ஆதரவளிக்க உள்ளது.