ஜார்க்கண்ட் மாநில நகரமான ஜாரியா ஆனது இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாகும். அதைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த தன்பாத் ஆனது மாசுபட்ட நகரமாக உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரட்டை நகரங்களான ஜாரியா மற்றும் தன்பாத் ஆகியவற்றில் நிலக்கரிச் சுரங்கப் பகுதிகள் அதிகம் உள்ளன.
இந்த அறிக்கையின் படி, நாட்டின் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில் ஆறு நகரங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளன (நொய்டா, பரேலி, காசியாபாத், பிரயாக்ராஜ், பெரோசாபாத் மற்றும் மொராதாபாத்).
மிசோரம் மாநிலத்தின் லுங்லே நகரமானது மிகக் குறைவான மாசுபட்ட நகரமாகும். மேலும் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைக்கப்பட்ட மட்டத்திற்கும் குறைவான அளவிலான நுண்மத் துகள்களைக் கொண்டுள்ள, இந்தியாவின் ஒரே நகரம் இதுவாகும்.
அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பான “க்ரீன்பீஸ் அமைப்பின்” நான்காவது ஏர்போகாலிப்ஸ் என்ற அறிக்கையின்படி இந்த விவரங்கள் அறியப் பட்டுள்ளன.
மத்திய அரசானது 2017 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு தேசிய தூய்மையான காற்று என்ற ஒரு திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
இது எளிதில் அணுக முடியாத 102 நகரங்களில் 2024 ஆம் ஆண்டில் நுண்மத் துகள்கள் - 10 மற்றும் நுண்மத் துகள்கள் - 2.5 ஆகியவற்றின் செறிவுகளை 30% வரை குறைக்கும் இலக்கைக் கொண்ட ஒரு ஐந்தாண்டு செயல் திட்டமாகும்.
க்ரீன்பீஸ் அமைப்பானது 1971 ஆம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடமானது நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் உள்ளது.
இந்தியாவில், இந்த அமைப்பின் தலைமையகமானது பெங்களூரில் உள்ளது.