இந்தியா டுடே இதழின் சிறந்த மாநிலங்களுக்கானப் பட்டியல்
December 18 , 2022 711 days 449 0
இந்தியா டுடே இதழின் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும், மாநிலங்களின் செயல்திறன் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்தியா டுடே இதழ் வெளியிடுகிறது.
பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, கல்வி, உள்கட்டமைப்பு, சட்டம் & ஒழுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு மாநிலங்களை பெரிய மற்றும் சிறிய மாநிலங்களாக இந்த நிறுவனம் பட்டியலிடுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 1303.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2018, 2019, 2020, 2021 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.
அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குஜராத், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை முறையே 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள மாநிலங்கள் ஆகும்.
பொருளாதார மேம்பாட்டில் குஜராத் முன்னணியில் உள்ளது.
கடந்த ஆண்டு அந்தப் பிரிவில் 4வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மருத்துவப் பிரிவில் கடந்த ஆண்டு 5வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறிய தமிழக மாநிலமானது சுகாதாரத்தில் கடந்த ஆண்டில் இருந்த 7வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சிறந்த உள்கட்டமைப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டில் 4வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.