மத்திய உள்துறை அமைச்சகமானது இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தை ( Indian Cyber Crime Coordination Centre - I4C) புது தில்லியில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
நிதி மோசடிகள், இணையதளத்தில் இனவாத, வகுப்புவாத மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை (Communal and pornographic content) பரப்புதல் போன்ற பல்வேறு சைபர் குற்றங்களை இந்த மையம் கையாளும்.
பல்வேறு சைபர் குற்றங்களுடைய வழக்குகளின் விசாரணையின் போது வெளிப்படும் சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் குற்றங்களுடைய வழிநடத்திகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலை இம்மையம் தயாரித்து பராமரிக்கும்.
சைபர் குற்றங்களை தடுப்பதற்காக, இந்த விவரப் பட்டியலானது பாதுகாக்கப்பட்ட உட்பிணையங்களின் (Secured internal Network) வழியே பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற பணிமுறையைக் கொண்ட மையங்களை உருவாக்க மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை அதிகாரிகளுக்கு சைபர் தடயவியல் பயிற்சி ஆய்வகத்தோடு கூடிய பயிற்சி மையத்தை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நிதி உதவியையும் (Cyber Forensic Training laboratory-Cum-training Centre) வழங்க உள்ளது.