2025-26 ஆம் நிதியாண்டிற்கான இந்திய இரயில்வே துறையின் நிதிநிலை ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைப் போலவே 2.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதில் அரசு தனியார் கூட்டு முதலீடுகள் உட்பட மொத்தம் 2.65 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இரயில்வே மூலதனம் ஆனது 2.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்திய இரயில்வே நிர்வாகத்தில் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு ஆனது 2025-26 ஆம் நிதியாண்டில் 12,118.39 கோடியாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும், 2024-25 ஆம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சுமார் 27,570.77 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை அலகுகள் (PSU) மற்றும் கூட்டுத் துணிகர முதலீடுகள் (JV) ஆகியவற்றில் முதலீட்டிற்கான ஒதுக்கீடு ஆனது 2025-26 ஆம் நிதியாண்டில் 22,444.33 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்திய இரயில்வே நிர்வாகமானது சுமார் 1.6 பில்லியன் டன் சரக்கு இரயில் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டும்.
இதன் மூலம், 3.7 பில்லியன் டன் கொள்ளளவு கொண்ட சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகளவு சரக்கு இரயில் கொள்ளளவு திறனைக் கொண்ட இரண்டாவது இரயில்வே நிர்வாகமாக இது மாறும்.
2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை ஒதுக்கீட்டில் ‘ஒரு அதிவேக விரைவு’ இரயில் திட்டத்திற்கான ஒதுக்கீடு 19,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் இரயில்வே நிர்வாகமானது அதன் வலையமைப்பினை 100% மின்மயமாக்கும் இலக்கை அடைய உள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் இரயில்வே நிர்வாகமானது பயணிகள் வருவாயில் முதல் முறையாக 3 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரயில்வே நிதிநிலை அறிக்கையானது முதன்முதலில் 1924 ஆம் ஆண்டில் பொது நிதி நிலை அறிக்கையிலிருந்துப் பிரிக்கப்பட்டது.
92 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2017-18 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மத்திய நிதிநிலையைத் தாக்கல் செய்தபோது இந்த நடைமுறை முடிவுக்கு வந்தது.
இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளையும் இணைக்கும் முடிவு விவேக் தேவ்ராய் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.