இலங்கை அகதிகள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
March 17 , 2024 253 days 385 0
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசுக்கு பொது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
1964 ஆம் ஆண்டு சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 ஆம் ஆண்டு சிரிமாவோ - காந்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
பின்னர், இந்திய வம்சாவளி மக்களுக்குப் பொருந்தக் கூடிய வகையில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 5(1)(b) என்ற பிரிவின் கீழ் இந்தப் பிரச்சினையானது கையாளப் பட்டது.
இருப்பினும், 1964 ஆம் ஆண்டின் சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்வதற்கான சட்டப்பூர்வமான கால வரம்பு 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 31 என நிர்ணயிக்கப்பட்டது.
இந்தச் செயல்பாட்டு வரம்புத் தேதிக்கு முன் விண்ணப்பிக்கத் தவறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் 5(1)(b) என்ற ஒரு பிரிவின் கீழ் கூட இந்தியக் குடியுரிமையைப் பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.
செல்லுபடியாகும் தன்மை கொண்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் மற்றும் அனுமதிக்கப்பட்டக் காலத்திற்கு அப்பால் தங்கி இருப்பவர்கள் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 2(1)(b) என்ற பிரிவின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவராக மட்டுமே கருதப்படுவர்.
1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 3(1)(c) என்ற பிரிவு, 2003 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் அமலாக்கத்திற்குப் பிறகு, இந்தியாவில் பிறந்தவர்கள் அவர்களின் பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்தாலோ அல்லது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியக் குடிமக்களாக இருந்து மற்றொருவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக இல்லாமல் இருந்தாலோ மட்டுமே பிறப்பின் மூலம் குடியுரிமை கோர முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது.