TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற 45-ஆவது தலைமை நீதிபதி: தீபக் மிஸ்ரா

August 9 , 2017 2716 days 1030 0
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
  • இதையடுத்து, சட்ட விதிகளின்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பிறகு மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்தது.
  • 63 வயதாகும் தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அந்தப் பதவியை அவர் தொடர்ந்து 14 மாதங்கள் வகிப்பார்.
  • அயோத்தி வழக்கு, காவேரி பிரச்னை, பிசிசிஐ சீர்திருத்தங்கள், பனாமா ஆவணங்கள் கசிவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளில், தீபக் மிஸ்ராவும் இடம் பெற்றுள்ளார்.
  • முன்னதாக, கடந்த 1977-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றம் மற்றும் சேவைகள் தீர்ப்பாயத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். இதையடுத்து, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 1996-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்