கேர் (CARE) மதிப்பீடுகள் என்ற நிறுவனத்தின் அறிக்கையின் படி, பிரிக்ஸ் நாடுகளின் மத்தியில் இந்தியா அதிக வாராக் கடன்களை (NPA-Non Performing Assets) பெற்றுள்ளதாகவும், அதிகளவிலான வாராக் கடன்களைப் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் இந்தியாவிற்கு முன்னே உள்ள நாடுகள் கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து ஆகியனவாகும்.
PIIGS நாடுகளைச் சார்ந்த ஸ்பெயின் மட்டுமே பட்டியலில் இந்தியாவை விட பின் தங்கியுள்ளது.
PIIGS எனும் அடைமொழி நிதி நெருக்கடி ஏற்பட்டு வலுகுறைந்த பொருளாதாரத்தை கொண்ட போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் என்ற ஐந்து ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பதாகும்.
இந்திய அரசு, அதிக வாராக் கடன் சுமையுடைய, அரசிற்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிரளிக்க மறு மூலதனமளிக்கும் திட்டத்தை (Recapitalize) அறிவித்துள்ளது.
2019 மார்ச் முதல் நடைமுறைக்கு வரும் மூன்றாவது பசேல் (Basel-3 Norms) மூலதன நிறைவு விகிதங்களுடன் (capital adequacy standards) ஒத்துப் போவதற்கும், மோசமான கடன்களை நிவர்த்தி செய்வதற்கும், இருப்புநிலைக் குறிப்பினை தூய்மைப்படுத்துவதற்கும் வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.