மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Indian Institute of Science-IISc) இந்தியாவின் முதல் உய்யமிகை நிலை Co2 பிரேடன் சுழற்சி சோதனை வளை தடப்பாதை (Super Critical Co2 Brayton Cycle test Loop Facility) வசதியை நிறுவியுள்ளது.
மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்களிலிருந்து சோலார் வெப்ப ஆற்றல் உள்பட பல்வேறு பசுமை ஆற்றல்களை உற்பத்தி செய்யக்கூடிய, சோலார் வெப்ப மூலத்துடன் இணைக்கப்பட்ட உலகின் முதல் சோதனை வளை தடப்பாதை (loop) தொழில்நுட்பம் இதுவாகும்.
இந்தோ - அமெரிக்க கூட்டு பசுமை ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய திட்டத்தின் (Indo-US Joint Clean Energy Research and Development Centre programme) கீழ் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் இதற்கு நிதியளிக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கான சோலார் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் என்றழைக்கப்படும் இந்தோ-அமெரிக்க கூட்டமைப்பின் ஓர் பகுதியாக இத்தொழிற்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
உய்ய மிகைநிலை கார்பன்-டை-ஆக்ஸைடு அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியானது, வழக்கமான நீராவி அடிப்படையிலான மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்களுக்கு திறனான மாற்றை வழங்க வல்லதால் இது கணிசமான அளவு கார்பன் அடிச்சுவட்டை குறைக்கும்.