உலக வானிலை அமைப்பு (WMO) ஆனது, 2022 ஆம் ஆண்டு உலகப் பருவநிலை குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
173 வருடங்களாக வெளியிடப் பட்டு வரும் இந்த முக்கியப் பதிவில், 2015 முதல் 2022 வரையிலான ஆண்டுகள் மிகவும் வெப்பமான எட்டு ஆண்டுகளாகும்.
தெற்காசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டப் பகுதிகள் பருவநிலை மாற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப் படக் கூடியப் பகுதிகளாக அறியப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, 1850-1900 ஆண்டு காலச் சராசரியை விட 1.15 ° C [1.02–1.28] அதிகமாக இருந்தது.
2022 ஆம் ஆண்டில் இந்தியப் பருவமழையானது இயல்பை விட முன்னதாகத் தொடங்கி தாமதமாக முடிவடைந்தது.
கோடைப் பருவ மழையினைப் பெறும் மேற்கு இந்தியப் பகுதிகளில் பதிவான மொத்த மழைப் பொழிவானது, நீண்ட கால (1951–2000) சராசரியை விட அதிகமாக இருந்தது.
முதலாவது பத்தாண்டுகளில் பதிவான செயற்கைக் கோள் பதிவின் (1993-2002) படி, உலகச் சராசரி கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது ஆண்டிற்கு 2.27 மி.மீ. ஆக உள்ளது.
இது 2013-2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 4.62 மி.மீ. என இரட்டிப்பாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதியன்று, அண்டார்டிக் கடலின் பனிப்பரவலானது, 1.92 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்று இது வரை இருந்த அளவை விட குறைவான அளவினை எட்டியது.
இது நீண்ட கால (1991-2020) சராசரியை விட கிட்டத்தட்ட 1 மில்லியன் சதுர கி.மீ. குறைவாக உள்ளது.
வறட்சி காரணமாக சோமாலியாவில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.