இந்தியா தனது புலம்பெயர்ந்த இந்தியர்களிடமிருந்து அதிகபட்சமாக 129 பில்லியன் டாலர் மதிப்பிலான பண வரவுகளைப் பெற்ற நாடு என்ற அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பண வரவு மட்டும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் (சுமார் 67 பில்லியன் டாலர்) மற்றும் வங்காளதேசம் (68 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகளின் வருடாந்திர வரவு செலவு (பட்ஜெட்) தொகைகளை விட கூடுதல் தொகையாகும்.
மிகவும் அதிக பண வரவு கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மெக்ஸிகோவை விட இது கிட்டத்தட்ட இருமடங்காகும்.
சுமார் 68 பில்லியன் டாலர்களுடன் மெக்சிகோ இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ள நிலையில் 48 பில்லியன் டாலர்களுடன் சீனா மூன்றாவது இடத்தையும், 40 பில்லியன் டாலர்களுடன் பிலிப்பைன்ஸ் நான்காவது இடத்தையும், 33 பில்லியன் டாலர்களுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தையும் இதில் பிடித்தன.
2020 ஆம் ஆண்டினைத் தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பண வரவினைப் பெறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒட்டு மொத்தப் பண வரவு 57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்தத்தில், 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியா பண வரவு மூலமாக மட்டும் சுமார் 1 டிரில்லியன் டாலர்களை (982 பில்லியன் டாலர்) பெற்றுள்ளது.