கார்னெல் (Cornell) பல்கலைக்கழகம், இன்ஸீட் (INSEAD) அமைப்பு மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் (World Intellectual Property Organisation) ஆகியவற்றால் வெளியிடப்படும் உலக புத்தாக்க குறியீட்டின் (Global Innovation Index) 2017ஆம் ஆண்டு பதிப்பில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி 130 நாடுகளில் 60-வது இடத்தைப் பிடித்து மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் உயர் இடத்தைப் பிடித்த நாடாக உயர்ந்துள்ளது.
இக்குறியீட்டின்படி, ஆசிய நாடுகளுள் சீனா 22-வது இடத்தைப் பிடித்திருப்பினும் ஆசியாவின் வளரும் புத்தாக்க மையமாக இந்தியா உயர்ந்து வருகின்றது என்பதை இக்குறியீடு சுட்டுகின்றது.
புத்தாக்கத்தினால் வழி நடத்தப்படும் பொருளாதாரமுடைய நாடாக இந்தியாவை உருவாக்க, நிதி ஆயோக், இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII – Confederation of Indian Industries) மற்றும் தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP – Department of Industrial Policy & Promotion) ஆகியவை இந்திய புத்தாக்க குறியீட்டை (Indian Innovation Index) வெளியிடுகின்றன.
நாட்டின் முதல் ஆன்லைன் புத்தாக்க குறியீட்டு இணைய வாயிலின் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களினுடைய புத்தாக்கங்களைப் பற்றிய தரவுகள் பெறப்பட்டு ஆராயப்பட்டு அவற்றின் மூலம் இந்திய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்படும்.
இந்த இணையவாயிலில் இந்திய மாநிலங்களின் புத்தாக்கங்களினைப் பற்றிய தகவல்கள் உண்மை நேர அளவில் (real time) தொடர்ந்து மேம்படுத்தப்படும்.