போலியோ நோய் மற்றும் அதன் ஒழிப்பு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 24 அன்று உலக போலியோ தினம் கொண்டாடப் படுகின்றது.
உலக போலியோ தினம் 2019 இன் கருப்பொருள் “முன்னேற்றக் கதைகள்: உலக போலியோ தினத்திற்கான கடந்த காலமும் நிகழ்காலமும்”.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ இன்னும் பரவலாக உள்ளது.
இந்தியாவில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட போலியோவின் நிலை 2011 ஜனவரி ஆகும்.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கடைசியாக கண்டறியப்பட்ட கொடிய போலியோ வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் SEAR (South East Asian Region - தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம்) நாடுகள் போலியோ இல்லாத நாடுகள் என அறிவிக்கப் பட்டுள்ளன.
நைஜீரியா 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போலியோ தாக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது.
சர்வதேச போலியோ ஒழிப்பு முயற்சியானது பின்வரும் 5 அமைப்புகளான “உலக சுகாதார அமைப்பு, ரோட்டரி இன்டர்நேஷனல், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி (யுனிசெஃப்) மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் நாடுகளின் தேசிய அரசுகளும் ஒரு பொது-தனியார் பங்குதார முறையில் இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சியாகும்.
போலியோ என்பது ஒரு அதிகம் தொற்றக் கூடிய நோய் ஆகும்.
இது பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும் கொடிய ‘போலியோ வைரஸ்’ காரணமாக ஏற்படும் நோய் ஆகும்.
கொடிய போலியோ வைரஸ் (Wild Polio Virus - WPV) எனப்படும் போலியோ வைரஸில் மூன்று விகாரங்கள் உள்ளன.
கொடிய போலியோ வைரஸ் 3 என்ற வகையால் கடைசியாக ஏற்பட்ட பாதிப்பு 2012 ஆம் ஆண்டில் வடக்கு நைஜீரியாவில் காணப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் கொடிய போலியோ வைரஸ் வகை 2 நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது - இது நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது கொடிய போலியோ வைரஸ் வகை ஆகும்.
மூன்று கொடிய போலியோ வைரஸ்களில் இரண்டு நீக்கப்பட்ட நிலையில், கொடிய போலியோ வைரஸ் வகை 1 மட்டுமே இன்னும் புழக்கத்தில் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே இன்னும் காணப் படுகின்றது.