உலகப் போலியோ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி போலியோ நோயின் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இளம் பிள்ளை வாதம் எனும் போலியோ நோய்க்கு எதிராக முதல் வெற்றிகரமான தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்-ன் பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் பத்தாண்டுகளுக்கு முன் ரோட்டரி இன்டர்நேஷனல் எனும் அமைப்பால் உலக போலியோ தினம் துவங்கப்பட்டது.
இந்தியா உட்பட வடகிழக்கு பகுதிகளை போலியோ அற்ற பகுதியாக 27 மார்ச் 2014 அன்று உலக அமைப்பு அறிவித்தது.
உலகளாவிய போலியோ ஒழிப்புத் திட்டம் (GPEI) 1988 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டம் இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் போலியோ வைரஸ்களை அழிப்பதில் பெரும்பங்காற்றி உள்ளது. இத்திட்டம் துவங்கப்பட்ட பொழுது, போலியோ வைரஸ் சுமார் 125 நாடுகளில் நிலவி வந்தது. தற்பொழுது இந்த வைரஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே இருக்கிறது.
போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) வைரஸ் கிருமியால் உண்டாகும் போலியோ நோய் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் வழியாக இந்நோய் பிறருக்கு பரவுகிறது. மலத் துகள்களினால் மாசடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்ளும்பொழுது, இந்த வைரஸ் குடலில் பெருகி அங்கிருந்து நரம்பு மண்டலத்தில் குருதியோட்டம் வழியாக கலந்து வாதத்தை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
போலியோ நோயின் முதல்கட்ட அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்து, கை கால்களில் விறைப்புத் தன்மை மற்றும் வலி ஆகியவை ஆகும்.
இருநூற்றில் ஒரு பங்கு நோய் தாக்குதல் நிகழ்வுகள் மீளமுடியாத/குணப்படுத்த முடியாத வாதத்தை (குறிப்பாக கால்களில்) உண்டாக்குகின்றன.
இவ்வாறு நோய் பாதிக்கப்பட்டவர்களுள் 5 முதல் 10 சதவீத மக்கள் சுவாச தசை நார்கள் செயல் இழப்பால் உயிர் இழக்கின்றனர்.
நோய்தடுப்பு
போலியோ நோயினை குணப்படுத்த முடியாது, இருப்பினும் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தடுப்பூசிகள் உள்ளன. நோயெதிர்ப்புத் திறனூட்டல் மூலமாக போலியோ நோயைத் தடுக்க முடியும்.