உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்': மத்திய அரசு முடிவு
July 24 , 2017 2723 days 933 0
முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான “சூப்பர் கம்ப்யூட்டரை” (அதிதிறன் கணினி) தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் மூன்று கட்டங்களாக இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ரூ.4,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் அறிவியல் ஆய்வுகளுக்கு சர்வதேச தரத்திலான கணினிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மூன்று கட்டமாக மொத்தம் 50 சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் உருவாக்கப்படவுள்ள 6 சூப்பர் கம்ப்யூட்டர்களில் 3 கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் வாங்கப்படவுள்ளன. அடுத்த 3 கம்ப்யூட்டர்களின் உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இவை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், கான்பூர், காரக்பூர், ஹைதராபாத் ஐஐடிக்கள், புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும். இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
இரண்டாவது கட்டத்தில் சூப்பர் கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.
இப்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன.
இந்தியாவில் 1988ஆம் ஆண்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் பரம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டன. எனினும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 25 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவை வானிலை, பருவநிலை மாற்றம், அணு ஆய்வு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.