2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வைப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தினை 8.1 சதவீத அளவில் அரசு அங்கீகரித்துள்ளது.
ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் ஐந்து கோடி சந்தாதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் இது நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 8.1 சதவீதம் என்ற அளவாகக் குறைப்பதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்திருந்தது.