அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் புதிய இயக்குநராக, அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டோஃபர் ரே-வை அந்த நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்ப்புக்குச் சாதகமாக ரஷியாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரிப்பது தொடர்பாக, இதுவரை எஃப்.பி.ஐ. இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமிக்கும், டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் கோமியைப் பதவியிலிருந்து அகற்றிய டொனால்ட் டிரம்ப், அந்தப் பதவிக்கு கிறிஸ்டோஃபரின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில், இந்த நியமனம் குறித்து நாடாளுமன்றத்தின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.