எண்ணூர் சிற்றோடைப் பகுதியின் நீரியல், சூழலியல் மற்றும் நிலவியல் இயல்பு நிலைகளை அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளும், குறிப்பாக கரிம உலர் சாம்பல் பயன்பாடும் பெரிதும் பாதித்துள்ளதாக தேசிய பசுமை வாரியம் நியமித்த வல்லுனர் குழு கண்டறிந்துள்ளது.
இந்த நிபுணர் குழுவானது கரிம உலர் சாம்பல் மாசுப்பாடும், எண்ணூரிலுள்ள வடசென்னை அனல்மின் நிலையமும் (NCTPS) சுற்றுச்சூழலை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ஆய்ந்து அறிக்கையளித்துள்ளன.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மீன்கள், நண்டுகள், இறால்கள் மற்றும் சிப்பிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனைத்து மாதிரிகளிலும் அளவுக்கு அதிகமான செம்பு உலோகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மீன்களின் செதில்களில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது நீர்வாழ் உயிரினங்கள் நீந்துவதையும், உணவு தேடும் ஆற்றலையும் பாதிக்கும்.
எண்ணூர் சிற்றோடையிலிருந்து எடுக்கப்பட்ட மீன்களில் அளவுக்கு அதிகமாக காட்மியம் மாசுப்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகபட்ச கட்டுப்பாட்டு அளவுகளை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளும் சோதனை செய்யப்பட்டன. இதில் பாதிப்பை ஏற்படுத்துமளவு அதிகமாக நீலிரும்பு (Chromium) மற்றும் ஈயம் (Lead) இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மாசுப்பாடு சதுப்பு நிலக்காடுகளையும் பாதிக்கிறது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் பகுதியில் வாழும் மீனவர்கள் மாசுபட்ட நீர் வளங்களை உபயோகிப்பதால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகளை கண்டறிய தனியாக ஒரு ஆய்வுக் குழுவினை தேசிய பசுமை வாரியம் அமைத்துள்ளது. மேலும் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் இக்குழு ஆராயும்.