சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதலுக்கு மூலகாரணமாக இருக்கும் கரியமிலவாயு (கார்பனை) வெளியேற்றத்தை முற்றிலும் குறைத்து, சென்னை ஐசிஎஃப் (Integral Coach Factory – ICF) நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் வெளியேற்றப்படும் கார்பனால், புவி வெப்பமடைந்து பருவநிலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான சென்னை ஐசிஎஃப், கார்பனை வெளியேற்றும் அளவை முற்றிலும் குறைத்துள்ளது.
ஐசிஎஃப் நிறுவனத்துக்குத் தேவைப்படும் மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படுகிறது
அதாவது 5 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலமும், 2.4 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலமும் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அலுவலகம், வளாகத்துக்குத் தேவையான மின்விளக்குகள் LED விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.
இத்துடன், தொழில் நிறுவனத்துக்கு பயன்படுத்தும் எண்ணெய் (லூப்ரிகேஷன்) பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கார்பனின் அளவு மிகவும் குறைந்துள்ளது.
அத்துடன் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதால் அதிக அளவிலான மாசு மற்றும் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் பயனாக, நாட்டிலேயே ரயில்வேத் துறையில் முதன்முறையாக, சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் கார்பனை முற்றிலும் குறைத்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.