நிதிப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் காரணமாக ஐ.நா.வின் “விரிவான அகதிகள் பதில் நடவடிக்கைக் கட்டமைப்பிலிருந்து” (United Nations Comprehensive Refugee Response Framework) வெளியேற உள்ளதாக தான்சானியா அறிவித்துள்ளது.
நெடுங்காலமாக தான்சானியாவானது அகதிகளுக்கு பாதுகாப்பான இடமாக (Safe haven) கருதப்பட்டு வருகின்றது. குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசின் மக்களும் (Democratic Republic of Congo) புருண்டி நாட்டு மக்களும் தான்சானியாவில் அகதிகளாக குடியேறியுள்ளனர்.
சில புருண்டி நாட்டு அகதிகளுக்கு (Burundians) குடியுரிமை (Citizenship) வழங்குவதை நிறுத்தியிருப்பதாகவும், இனி அகதியாக குடியேறுவதற்கான தஞ்ச விண்ணப்பங்களுக்கு (Asylum Application) இடமளிக்கப் போவதில்லை எனவும் கடந்த மாதம் தான்சானியா ஐ.நா.வின் அகதிளுக்கான உயர் ஆணையரிடம் (UN High Commissioner of Refugees) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடியேறிய அகதிகளை தன் சமூகத்தோடு ஒருங்கிணைப்பதில் தான்சானியாவிற்கு உதவ ஒப்புக் கொள்ளப்பட்ட தொகையை சர்வதேச சமுதாயம் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக சர்வதேச (International Community) சமுதாயத்தின் மீது தான்சானியா குற்றம் சாட்டியுள்ளது.