சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் குல்தாபாத் நகரத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை விவகாரத்தில் நாக்பூரில் வன்முறை மோதல்கள் வெடித்தன.
ஔரங்கசீப், 300 ஆண்டுகளுக்கு முன்பு 1707 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
அவரது கல்லறை 14 ஆம் நூற்றாண்டின் சிஷ்டி துறவியான ஷேக் ஜைனுதீனின் தர்கா (சன்னதி) வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் ஔரங்கசீப் இறப்பிற்குப் பிறகு சிறிது காலம் பேரரசராகப் பதவி ஏற்ற அவரது மகன்களில் ஒருவரான அசாம் ஷா, ஐதராபாத்தின் முதல் நிஜாம் முதலாம் அசஃப் ஜா (1724-48), மற்றும் அசாஃப் ஜாவின் மகன் இரண்டாவது நிஜாம், நசீர் ஜங் (1748-50) ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டனர்.