மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கஜீரஹோ கோவில் நகரில் 44- ஆவது கஜீரஹோ நடனத் திருவிழா (Khajuraho Dance Festival) துவங்கியுள்ளது.
மத்திய பிரதேச அரசின் மாநில கலாச்சார துறையினால் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
6 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில் கதக் (Kathak), ஒடிஸி (Odissi), பரதநாட்டியம் (Bharathanatyam), குச்சுப்புடி (Kuchipudi), கதக்களி (Kathakali) மற்றும் மோகினியாட்டம் (Mohiniattam) உட்பட பல்வேறு நடனங்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.
மேலும் இவ்வருடம் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்களின் ஓவியங்களை காட்சிப்படுத்துவதற்காக கலைச் சந்தை (Art Mart) ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
வழக்கமாக, இத்திருவிழாவின் போது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்வ நாதா ஆலயம் (Vishwanatha Temple) மற்றும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்ரகுப்தா ஆலயம் (Chitragupta Temple) ஆகிய ஆலயங்களின் முன்பு திறந்தவெளி அரங்கேற்ற மேடைகளில் நடனங்கள் இயற்றப்படும்.
கி.பி. 950 – கி.பி. 1050 க்கு இடைப்பட்ட காலத்தில் சண்டேலா (Chandela) வம்ச ஆட்சியாளர்களால் கஜீரஹோவில் இக்கோயில்கள் கட்டப்பட்டன.
இக்கோவிலில் உள்ள பாலுணர்வு வெளிப்படுத்துக் கற்சிலைகள் (Erotic Sculptures) உலகம் முழுவதும் அறியப்படுபவையாக உள்ளன.