பிரச்சனைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள சிங்கப்பூரின் சங்கி கடற்படை தளத்தில் எரிபொருள் நிரப்புதல் போன்றவை உள்ளடங்கிய தளவாட ஆதரவுகளை இந்திய கடற்படை கப்பல்களுக்கு அளிக்கும் கடற்படை ஒத்துழைப்பிற்கான இரு நாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
மலாக்கா நீரிணைக்கு கிழக்கில் அமைந்துள்ள நாட்டுடன் இந்திய கடற்படை தளவாட ஒப்பந்தம் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்திட்டத்திற்கு (Act East Policy) உந்துதலளிக்கும். மேலும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு, நிலைத்தன்மை, பிராந்திய அமைதி மற்றும் கடற்வழிப்பயண சுதந்திரம் போன்றவற்றிற்கான இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும்.
தில்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர்களின் இரண்டாவது பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.